நாகூரில் நூதனமுறையில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது


நாகூரில் நூதனமுறையில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2019 10:45 PM GMT (Updated: 9 Dec 2019 7:12 PM GMT)

நாகூரில் நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 148 மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

நாகூர்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தலின் பேரில் சாராயம் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிரு‌‌ஷ்ணன் மற்றும் போலீசார் மேலவாஞ்சூரை அடுத்த முட்டம் பஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் ஒருவர் ஜாக்கெட் போல் உள்ள சட்டையை அணிந்து கொண்டு வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் ஜாக்கெட் போல் சட்டை அணிந்து அதில் மறைத்து வைத்து நூதனமுறையில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

மோட்டார்சைக்கிள் பறிமுதல்

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மன்னார்குடி கீழபாலத்தை சேர்ந்த ஜெயபால் (வயது 55) என்பதும், ஜாக்கெட் போல் சட்டை அணிந்து நூதனமுறையில் 148 மதுபாட்டில்களை காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூரில் இருந்து மன்னார்குடிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள், ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள 148 மதுபாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story