தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சென்னையில் கட்டப்பட்ட 610 குடியிருப்புகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சென்னை, மதுரையில் கட்டப்பட்ட 610 குடியிருப்புகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக சென்னை மகாகவி பாரதி நகர்(எம்.கே.பி.நகர்) திட்டப் பகுதியில் சுயநிதி திட்டத்தின் கீழ் 2.46 ஏக்கர் பரப்பளவில் தூண் தளம் மற்றும் 15 தளங்களுடன் ரூ.129 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 510 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இக்குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 688 முதல் 721 சதுர அடி கட்டிட பரப்பளவுடன், 2 படுக்கை அறைகள், சமையலறை, படுக்கையறையுடன் இணைந்த கழிவறை மற்றும் குளியலறை, குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டப் பகுதியில் குடிநீர் வசதிக்கான ஆழ்துளை கிணறு, கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, மின் மோட்டார் அறை, மழைநீர் சேகரிப்பு வசதிகள், தெரு விளக்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
மதுரையில் அம்மா திருமண மண்டபம்
சென்னை முகப்பேர், ஜெ.ஜெ.நகர் கிழக்கு திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன் ரூ.12 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை புலியூர் திட்டப் பகுதியில் தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன் ரூ.11 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 48 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை மந்தவெளிப்பாக்கம் திட்டப் பகுதியில், தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன் ரூ.2 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் அண்ணா நகரில், தூண் தளம் மற்றும் 3 தளங்களுடன் ரூ.5 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ‘அம்மா’ திருமண மண்டபம் என மொத்தம் ரூ.162 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 610 குடியிருப்புகள் மற்றும் அம்மா திருமண மண்டபத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமை செயலாளர் க.சண்முகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பி.கே. வைரமுத்து, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் (பொறுப்பு) ச.கிருஷ்ணன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் பா.முருகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story