நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது


நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2019 3:45 AM IST (Updated: 10 Dec 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

நூதன முறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 16 டன் ரே‌‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

தமிழக அரசு பொதுவினியோக திட்டத்தின் கீழ் ரே‌‌ஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விலையில்லா ரே‌‌ஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை கடத்தல்காரர்கள் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கேரளாவில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோபாலபுரம் சோதனை சாவடி வழியாக ரே‌‌ஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா பதிவு எண் கொண்ட ஒரு லாரி வந்தது. அந்த லாரியை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியில் உப்பு மூட்டைகள் இருந்தன.

இதையடுத்து டிரைவரிடம் உப்பு கொண்டு செல்வதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி போலீசார் ஆய்வு செய்தனர். அந்த ரசீதில் லாரியின் பதிவு எண் கர்நாடகா என்பதற்கு பதிலாக கேரளா என்று தவறுதலாக இருந்தது. இதுதொடர்பாக டிரைவரிடம் விசாரித்ததில் தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை, கேரளா மாநிலம் மலப்புரத்துக்கு கொண்டு செல்வதாகவும், ரசீதில் லாரியின் பதிவு எண் தவறுதலாக எழுதப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஒரு பெரிய கம்பியை எடுத்து லாரியில் இருந்த மூட்டைக்குள் குத்தினர். அப்போது உப்புடன், அரிசியும் வந்தது. இதையடுத்து போலீசார் மூட்டைகளை பிரித்து பார்த்த போது ரே‌‌ஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும் ரே‌‌ஷன் அரிசி மூட்டைகளுக்கு மேல் உப்பு மூட்டைகளை வைத்து கேரளாவுக்கு நூதன முறையில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரே‌‌ஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்து தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

அங்கு வைத்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா தாலுகா வென்னிலா பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 40) என்பதும், லாரி உரிமையாளர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சினிஜோசப் என்பதும் தெரியவந்தது. மேலும் தூத்துக்குடியில் இருந்து மலப்புரத்துக்கு செல்வதாக தெரிவித்தார். ஆனால் ரே‌‌ஷன் அரிசியை லாரியில் ஏற்றியது யார்? யாரிடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்த தகவல் தெரியாது என்று போலீசாரிடம் டிரைவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் பிரசாத் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 350 மூட்டை ( 16 டன்) ரே‌‌ஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story