கள்ளக்குறிச்சியில், கலெக்டர் கிரண்குராலா தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம்


கள்ளக்குறிச்சியில், கலெக்டர் கிரண்குராலா தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2019 10:15 PM GMT (Updated: 9 Dec 2019 7:56 PM GMT)

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமையில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவான பிறகு முதன் முதலாக கடந்த 2-ந் தேதிமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த கூட்டத்துக்கு அதிகாரிகளும், 500-க்கும் மேற்படட பொதுமக்களும் வந்திருந்தனர். ஆனால் அன்றைய தினம் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதால், குறைகேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்கள், பெட்டியில் மனுக்களை போட்டு விட்டு சென்றனர்.

அதன் பிறகு நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ரெத்தினமாலா, மாவட்ட பழங் குடியினர் நல அலுவலர் பிரகா‌‌ஷ்வேல், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்பட 439 பேர் கலந்து கொண்டு அரசின் உதவித்தொகை, கடனுதவி, சாலை வசதி, வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுக்களை கலெக்டர் கிரண்குராலாவிடம் கொடுத்தனர். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை அந்தந்த துறை அதிகாரிகளிடம் கொடுத்து உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த பகுதிக்கு கலெக்டர் கிரண்குராலா நேரில் சென்று மனு வாங்கினார். கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், தாசில்தார் ரகோத்தமன், துணைவட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு உள்பட அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் தொடங்கிய பிறகு முதன் முதலில் நடந்த குறைகேட்பு கூட்டம் என்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு கொடுத்தனர்.

Next Story