தென்காசி மாவட்டத்துடன் 11 கிராமங்களை இணைக்க எதிர்ப்பு - கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
கடையம் அருகே உள்ள 11 கிராமங்களை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தென்காசி,
தென்காசி சுப்பாராஜா மஹாலில் நேற்று காலை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மனுக்கள் கொடுத்தனர்.
வாசுதேவநல்லூர் உழவர் உற்பத்தியாளர் குழுவின் சார்பில் பாண்டி மற்றும் விவசாயிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் வாசுதேவநல்லூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பி வைத்து 8 மாதங்கள் ஆகின்றன. அதற்குரிய பணத்தை ஆலையில் இருந்து வழங்கவில்லை. நாங்கள் கூட்டுறவு சங்கம் மூலம் கடன் பெற்று கரும்பு வெட்டி உள்ளோம். கூட்டுறவு சங்கத்தினர் அதிக நாள் ஆகி விட்டதாக கூறி வட்டி கெடுபிடியாக வசூல் செய்கின்றனர். எனவே சர்க்கரை ஆலையில் இருந்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வழங்கவும், கூட்டுறவு சங்கம் வசூலித்த வட்டி பணத்தை திரும்ப கிடைக்கவும் ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் நலச்சங்கத்தின் சார்பில் ஷேக் இப்ராகிம் என்பவர் கொடுத்த மனுவில், சொக்கம்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் பூலித்துரை, சங்கரன்கோவில் அருகில் உள்ள மலையான்குளத்தை சேர்ந்த ரெங்கசாமி மகன் கந்தசாமி ஆகிய இருவரும் மஸ்கட் நாட்டிற்கு கடந்த ஆண்டு வேலைக்கு சென்றனர். தற்போது அவர்களுக்கு கடின வேலையை கொடுப்பதாகவும், அடித்து சித்ரவதை செய்வதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். மீண்டும் இந்தியாவிற்கு திரும்புவதற்கு பாஸ்போர்ட் தர மறுக்கிறார்கள். எனவே அவர்களை மீட்டு இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆலங்குளம் அருகில் உள்ள மலைப்பகுதியில் 4 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தது தொடர்பாக, அந்த சிறுமியின் தாயார் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பாதிக்கப்பட்ட எனது மகளுக்கு அரசு நிதி உதவியும், எங்களது குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தலைவர் பழனி, செயலாளர் கற்பகம் ஆகியோரும் கோரிக்கை மனு வழங்கினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித்தொடர்பாளர் சந்திரன் தலைமையில் நரிக்குறவர்கள் ஊர்வலமாக வந்து மனு வழங்கினர். அதில், தங்களை குற்றாலம் சாலையோரத்தில் ஊசி, பாசி போன்ற பொருட்களை விற்பனை செய்ய குற்றாலம் போலீசார் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும், தங்களை தொழில் செய்ய அனுமதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடையம் அருகில் உள்ள ரெங்கசமுத்திரம், பள்ளக்கால், அடைச்சாணி, இடைகால் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட 11 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களது கிராமங்களை தென்காசி மாவட்டத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.
தென்காசி நகரசபை முன்னாள் பா.ஜ.க. கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் கொடுத்துள்ள மனுவில், தமிழக தேர்தல் ஆணையம் கூறியபடி வார்டு மறுவரையறை செய்யும்போது ஒரு வார்டுக்கு 1,500 வாக்காளர்கள் முதல் 2 ஆயிரம் வாக்காளர்கள் வரை சேர்க்கப்பட வேண்டும். ஆனால் தென்காசி நகரசபையில் ஒரு வார்டில் 3 ஆயிரம் வாக்காளர்களும், மற்றொரு வார்டில் 470 வாக்காளர்களும் உள்ளனர். உதாரணமாக 16-வது வார்டில் 1,227 வாக்காளர்களும், 29-வது வார்டில் 492 வாக்காளர்களும் உள்ளனர். இது அரசு விதியை மீறிய செயலாகும். எனவே இதனை முறைப்படுத்தி சரிசெய்த பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story