ஏரியில் உள்ள மின்மோட்டாரை இயக்குவதற்காக, சைக்கிள் துடுப்பு படகு வடிவமைப்பு


ஏரியில் உள்ள மின்மோட்டாரை இயக்குவதற்காக, சைக்கிள் துடுப்பு படகு வடிவமைப்பு
x
தினத்தந்தி 9 Dec 2019 10:30 PM GMT (Updated: 9 Dec 2019 8:00 PM GMT)

ஏரியில் உள்ள மின்மோட்டாரை இயக்குவதற்காக சைக்கிள் துடுப்பு படகை வடிவமைத்த ஊராட்சி செயலாளரை பொதுமக்கள் பாராட்டினர்.

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாலப்பட்டு ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக வறண்டு கிடந்த ஏரிக்குள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. மேலும் கிணற்றின் அருகே சிமெண்டு தளம் உயரமாக அமைத்து மின்மோட்டார் மூலம் பிளாஸ்டிக் குழாய்கள் வழியாக ஊரின் மைய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, தினந்தோறும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மழைகாலங்களில் ஏரிக்கு தண்ணீர் வந்தால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மின்மோட்டாரை இயக்கி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் செஞ்சி பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர்மழை காரணமாக பாலப்பட்டு ஏரி நிரம்பியது. இதனால் ஏரிக்குள் சென்று மின்மோட்டாரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதோடு, குடிநீர் வினியோகம் செய்யும் பணியும் பாதிக்கும் நிலை உருவானது. இதையடுத்து பாலப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணி புரிந்து வரும் பாலமுருகன் என்பவர் ஏரிக்குள் சென்று மின்மோட்டாரை இயக்கி விட்டு வர ஏதுவாக சைக்கிள் மாடல் படகு ஒன்றை தனது சொந்த செலவில் தயாரிக்க முடிவு செய்தார்.

அதன்படி செஞ்சியில் உள்ள ஒரு இரும்பு பட்டறையில் பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு தண்ணீரில் சென்று வர சுழலும் துடுப்புகளுடன் சைக்கிள் படகு ஒன்றை வடிவமைத்தார். அதன் மூலம் தண்ணீரில் சென்று ஏரியில் உள்ள மின்மோட்டாரை இயக்கி பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாலமுருகன் நிருபர்களிடம் கூறுகையில்,

மழைகாலங்களில் ஏரியின் நீர்மட்டம் உயரும்போது மின்மோட்டார் இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையிலும், சிரமமின்றி ஏரிக்குள் தண்ணீரில் சென்று வர ஏதுவாகவும் சைக்கிள் படகு ஒன்றை ரூ.13 ஆயிரத்து 600 செலவில் உருவாக்கி உள்ளேன். நான் உருவாக்கிய சைக்கிள் படகை சைக்கிள் ஓட்டுவதுபோல் மிதிக்கும் போது செயின் சுற்றுவதோடு, துடுப்பு நகர்ந்து தண்ணீரை தள்ளியபடி செல்கிறது. இந்த சைக்கிள் படகில் மோட்டார் இயக்குனர் காசிநாதன், எலக்ட்ரீசியன் விஜய் ஆகியோர் சென்று ஒருநாள் விட்டு ஒரு நாள் மின்மோட்டாரை இயக்கி வருகிறார்கள். மேலும் சைக்கிள் படகு விபத்து ஏற்பட்டால் தற்காத்து கொள்ள டியூப் ஒன்றும் படகில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் ஏரிக்குள் தண்ணீரில் சென்று வர ஏதுவாக சைக்கிள் படகு உருவாக்கிய ஊராட்சி செயலாளர் பாலமுருகனை செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அறவாழி மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். 

Next Story