அரசு ஊழியர் கொலை ஏன்? பரபரப்பு தகவல்; மேலும் 2 பேர் சிக்கினர்


அரசு ஊழியர் கொலை ஏன்? பரபரப்பு தகவல்; மேலும் 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 9 Dec 2019 11:15 PM GMT (Updated: 9 Dec 2019 10:06 PM GMT)

புதுச்சேரி அரசு ஊழியர் கொலை ஏன்? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கொலையில் மேலும் 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது 52). அரசு பொதுப்பணித்துறை ஊழியர். நேற்று முன்தினம் அதிகாலை தனது வீட்டில் இருந்து மணக்குள விநாயகர் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அங்குள்ள மாதாகோவில் அருகே வந்த போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது.

இது குறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் கைதான முக்கிய குற்றவாளிகளை ஜாமீனில் எடுக்க லோகநாதன் உதவி செய்துள்ளார். இதற்கு பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து முத்தியால்பேட்டை போலீசார், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட பாண்டியனின் மகன் கோகுல், சதீஷ், அருள்பாண்டி, பாண்டியனின் மனைவி மல்லிகா, சகோதரி பிரபா, மணிகண்டன், ராஜேஷ், ராஜ்குமார், குணசேகர், குணவேல் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 3 தனிப்படைகள் அமைத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோகுல், சதீஷ், அருள்பாண்டியன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு போலீஸ் பிடியில் சிக்கினர். இந்த சம்பவத்தில் நேற்று மேலும் 2 பேர் பிடிபட்டனர். இவர்கள் 5 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே லோகநாதனின் உறவினர்கள் நேற்று காலை எஸ்.வி.பட்டேல் சாலை-ஆம்பூர் சாலை சந்திப்பில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் பெரியகடை, முத்தியால்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.

போலீஸ் பிடியில் சிக்கிய 5 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், காங்கிரஸ் பிரமுகர் பாண்டியன் கொலை குற்றவாளிகளுக்கு லோகநாதன் உதவி செய்து வந்துள்ளார்.

இதுபற்றி அறிந்து ஆத்திரமடைந்து அவரை பழிக்கு பழியாக தீர்த்துகட்ட முடிவு செய்து அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகி்ன்றனர்.

இதற்கிடையே லோகநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதி சடங்கு நேற்று மாலை நடந்தது.

இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க குருசுக்குப்பம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story