கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண் கொலை: கைதான கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம்


கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண் கொலை: கைதான கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 9 Dec 2019 10:32 PM GMT)

திருவாடானை அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண்ணை கொலை செய்த கொத்தனார் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள சீர்தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி அமல செல்வி (வயது 40). கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். கட்டிட தொழிலாளியான இவர் திடீரென மாயமானார்.

இது குறித்து அவரது உறவினர்கள் திருவாடானை போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் கண்ணங்குடியை அடுத்த சித்தானூர் சமத்துவபுரத்தை சேர்ந்த கொத்தனார் கண்ணன் அமலசெல்வியிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில் அமலசெல்விக்கும், அவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், அமலசெல்வியை அவர் கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் கண்ணனை கைது செய்து சித்தானூர் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு அமல செல்வி காணாமல் போன அன்று உடுத்தியிருந்த ஊதா நிற சேலை மற்றும் எலும்புக் கூடுகள் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல் இயக்குனர் டாக்டர் நடராஜன், ராமநாதபுரம் தடயவியல் நிபுணர் வினிதா, திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், இன்ஸ்பெக்டர் கலாராணி, சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் சித்தானூர் காட்டுப் பகுதிக்குச் சென்று கொலை செய்யப்பட்ட அமல செல்வியின் எலும்புக்கூடுகள், மண்டை ஓடு, சேலை, தலைமுடி போன்றவற்றை டி.என்.ஏ. சோதனைக்காக சேகரித்து கொண்டனர். பின்னர் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கண்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

அமல செல்விக்கும், கண்ணனுக்கும் சுமார் 8 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு வீட்டில் இருந்து விட்டதால் கண்ணனுடன் இருந்த பழக்கத்தை அமல செல்வி நிறுத்திக்கொண்டார்.

இந்த நிலையில் தன்னிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன் வேறு நபருடன் அமலசெல்வி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக கண்ணன் சந்தேகம் அடைந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 8-ந்தேதி அமலசெல்வியை செல்போனில் தொடர்பு கொண்டு தேவகோட்டைக்கு வரச் சொல்லியுள்ளார்.

பின்னர் அவரை சித்தானூர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பின்னர் அவளது கழுத்தை நெரித்து கொலை செய்து காட்டுப் பகுதியிலேயே உடலை போட்டு விட்டு வந்துள்ளார்.

Next Story