வீட்டுக்கு ரூ.50 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தும்படி கூறியதால், தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த சினிமா உதவி இயக்குனர்-தாய்


வீட்டுக்கு ரூ.50 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தும்படி கூறியதால், தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த சினிமா உதவி இயக்குனர்-தாய்
x
தினத்தந்தி 10 Dec 2019 3:45 AM IST (Updated: 10 Dec 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்கு ரூ.50 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தும்படி கூறியதால் விரக்தி அடைந்து, தீக்குளிப்பதற்காக சினிமா உதவி இயக்குனர்-தாய் பெட்ரோலுடன் வந்ததால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று ஒரு மூதாட்டி மற்றும் வாலிபர் மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென பையில் இருந்து ஒரு பெட்ரோல் பாட்டிலை வெளியே எடுத்தனர். இதை பார்த்த போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, பெட்ரோல் பாட்டிலை பறித்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நத்தம் அருகேயுள்ள வடகாட்டுபட்டியை சேர்ந்த அருளப்பன் மனைவி ஆரோக்கியமேரி (வயது 65), அவருடைய மகன் அருள்பிரான்சிஸ் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அருள்பிரான்சிஸ் கூறுகையில், நான் பி.பி.ஏ. படித்துள்ளேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மானியத்துடன் கடன் வாங்கி ஒலிபெருக்கிகள் வைத்து தொழில் செய்தேன். அந்த தொழிலில் போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை. இதனால் வேலைக்காக சென்னைக்கு சென்றேன். அங்கு சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறேன். எனது ஒலிபெருக்கி சாதனங்கள் அனைத்தும் வீட்டில் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது வீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் இருந்ததால், ரூ.50 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளனர். மேலும் எனது தந்தையிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, ரூ.2 ஆயிரம் பெற்று சென்றுள்ளனர். அதற்கு உரிய ரசீதும் வழங்கவில்லை. ஒலிபெருக்கி தொழிலில் நஷ்டம் அடைந்து, சிரமப்பட்டு வருகிறோம். இதற்கிடையே ரூ.50 ஆயிரம் மின்கட்டணம் செலுத்தும்படி கூறியதால், தீக்குளிக்க பெட்ரோல் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தோம், என்றார்.

இதையடுத்து போலீசார் உரிய அறிவுரைகள் கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அவர்கள், புகார் பெட்டியில் மனுவை அளித்து விட்டு திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story