உள்ளாட்சி தேர்தல்: இரவு 10 மணிக்கு மேல் பிரசார கூட்டங்கள்- ஊர்வலங்கள் நடத்தக்கூடாது கலெக்டர் உத்தரவு


உள்ளாட்சி தேர்தல்: இரவு 10 மணிக்கு மேல் பிரசார கூட்டங்கள்- ஊர்வலங்கள் நடத்தக்கூடாது கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 10 Dec 2019 4:57 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என்று கலெக்டர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 12 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 113 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 201 கிராம ஊராட்சி தலைவர்கள், 1,662 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,988 பதவியிடங்களுக்கு நேர்முக தேர்தல் 2 கட்டமாக 1,017 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, திருமானூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதற்கட்டமாக வருகிற 27-ந் தேதியும், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-வது கட்டமாக வருகிற 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.

அதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவியிடங்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வேட்பு மனுக்களை வாங்கி, தாக்கல் செய்ய வேண்டும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை வாங்கி, தாக்கல் செய்ய வேண்டும். நேற்று முன்தினம் ஏராளமானோர் வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர்.

கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான மாதிரி நன்னடத்தை விதிகள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசியதாவது:-

வாக்குகளை பெறுவதற்காக வேட்பாளர்கள் சாதி அல்லது சமூக உணர்வுகளை தூண்டும் வகையில் எந்த வேண்டுகோளையும் விடுக்கக்கூடாது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் பிற வழிப்பாட்டு தலங்களை தேர்தல் பிரசார இடங்களாக பயன்படுத்தக்கூடாது.

வாக்காளர்களுக்கு கையூட்டு அளித்தல், வாக்காளர்களை அச்சுறுத்துதல், வாக்காளர்களை ஆள் மாறாட்டம் செய்தல், வாக்குச்சாவடிகளிலிருந்து 100 மீட்டருக்குள் ஆதரவு திரட்டுதல். தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு முடிவுறு நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு முந்தைய 48 மணி நேரத்தில் பொதுக்கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்துதல் மற்றும் வாக்குச்சாவடிக்கு சென்று வர வாக்காளர்களுக்கு வாகனம் மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்குதல். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ அக்கட்சியின் வேட்பாளர்களின் தொண்டர்களை எந்தவொரு தனிநபருடைய இடம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை தொடர்புடைய உரிமையாளரின் அனுமதி இன்றி கொடி கம்பங்கள் கட்டவும், பதாகைகள் வைக்கவும், அறிவிப்புகள் ஒட்டவும், வாசகங்கள் எழுதவும் பயன்படுத்த அனுமதிக்க கூடாது.

இரவு 10 மணிக்கு மேல்...

ஓர் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் தம் நடத்த உத்தேசித்துள்ள கூட்டத்திற்கான இடம் மற்றும் நேரம் குறித்து உரிய நேரத்திற்குள்ளாகவே உள்ளூர் போலீசாருக்கு தெரியப்படுத்தி அனுமதி பெற வேண்டும். ஒலிபெருக்கிகள் அல்லது வேறு பிற வசதிகளை பயன்படுத்துவதற்கான அனுமதி அல்லது உரிமம் பெறப்பட வேண்டியிருந்தால், அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் தொடர்புடைய அலுவலருக்கு முன்கூட்டியே விண்ணப்பம் செய்து அத்தகைய அனுமதி அல்லது உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள் இரவு 10 மணிக்கு மேல் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது. 2 நபர்கள் மட்டுமே பணி செய்யும் வகையில் வாக்காளர் உதவி மையங்கள் பந்தல்களை வாக்குச்சாவடிகளிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் அமைத்துக்கொள்ளலாம்.

அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் வாக்காளர் சிலிப்புகள் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அதில் சின்னமோ அரசியல் வாசகங்களோ இருக்க கூடாது. தேர்தல் பிரசாரம் தொடங்கப்படுவதற்கு முன் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்பட உள்ள அனைத்து வாகனங்கள் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அல்லது அவரால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்தல் செலவு உச்சவரம்பு

கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் செலவு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சித்தலைவர் தேர்தல் செலவு ரூ.34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் செலவு ரூ.85 ஆயிரமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் செலவு ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும் என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 தினங்களுக்குள் தேர்தல் அலுவலர்களிடம் செலவின கணக்குகளை ஒப்படைத்திட வேண்டும். ஒப்படைக்க தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாதவாறு மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கோட்டாட்சியர் பாலாஜி (அரியலூர்), கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரகு (உள்ளாட்சி தேர்தல்), ரவிச்சந்திரன் (பொது) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தாசில்தார்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story