நாகையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை எரிக்க முயற்சி 35 பேர் கைது


நாகையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை எரிக்க முயற்சி 35 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 10 Dec 2019 6:49 PM GMT)

நாகையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எரிக்க முயன்ற 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் பைசல் ரஹ்மான் தலைமை தாங்கினார். துணை தலைவர் அக்பர் அலி முன்னிலை வகித்தார்.

மாவட்ட பொதுச்செயலாளர் பாபுகான், மாவட்ட செயலாளர்கள் சேக் அலாவுதீன், அபுகாசிம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்ட திருத்த மசோதாவின் நகலை திடீரென எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 10 பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட பொதுச்செயலாளர் சங்கை ரபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சபீக் அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜியாவுதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் முகமது சலீம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனர்.

Next Story