சிங்கப்பெருமாள் கோவில் அருகே மர்மபொருள் வெடித்து - 2 பேர் படுகாயம்


சிங்கப்பெருமாள் கோவில் அருகே மர்மபொருள் வெடித்து - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Dec 2019 4:00 AM IST (Updated: 11 Dec 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மர்மபொருள் வெடித்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் ராணுவ பயிற்சி தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ பயிற்சி தளத்தில் துணை ராணுவ படையினர், அதிரடி படை வீரர்கள் உள்பட பலரும் தங்கி கையெறி குண்டு எறிதல், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

இந்த பயிற்சி தளத்தை ஒட்டி அனுமந்தபுரம் கிராமம் உள்ளது. ராணுவ வீரர்கள் பயன்படுத்திய பொருட்களை அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் சேகரித்து பழைய இரும்பு கடையில் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 45), என்பவர் நேற்று மாலை ராணுவ பயிற்சி தளத்தின அருகே கிடந்த இரும்பு பொருட்களை எடுத்து ஒரு கோணிப்பையில் போட்டுக்கொண்டு அனுமந்தபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். கோவிந்தம்மாள்(50) என்பவரது வீட்டின் அருகே செல்லும் போது மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த கோணிப்பையில் இருந்த மர்ம இரும்பு பொருட்கள் தவறி கீழே விழுந்தது. அதில் ஒன்று திடீரென வெடித்து சிதறியது.

அங்கு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த கோவிந்தம்மாள் என்ற பெண்ணுக்கும், மோட்டார் சைக்கிளில் இரும்பு பொருட்களை எடுத்து வந்த ராமகிருஷ்ணன் மற்றும் அந்த சாலை வழியாக சென்ற ஒரு பசு மாட்டுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக படுகாயம் அடைந்த ராமகிருஷ்ணன், கோவிந்தம்மாள் ஆகியோரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த பசு மாட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோணிப்பையில் இருந்து கீழே விழுந்த இரும்பு பொருட்கள் மீண்டும் ஏதாவது வெடித்து விடலாம் என்ற அச்சத்தில் அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

இது பற்றி தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மறைமலைநகர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமகிருஷ்ணன் கோணிப்பையில் எடுத்து சென்ற இரும்பு பொருட்களையும், வெடித்து சிதறிய பொருளின் பாகங்களையும் சேகரித்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனுமந்தபுரம் ராணுவப் பயிற்சி தளத்தை ஒட்டி கிராமப்புற பகுதியில் ஏதாவது இரும்பு போன்ற பொருட்கள் கிடந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் அந்த பொருட்களை பொதுமக்கள் யாரும் கையில் எடுக்க வேண்டாம் என்பதை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்டு மாதம் இதே போல அனுமந்தபுரம் கிராமத்தில் மலைப்பகுதி அருகே 10-க்கும் மேற்பட்ட வெடிக்காத வெடிகுண்டுகள் கிடந்தது. இதனைப் பற்றி மறைமலைநகர் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் அனுமந்தபுரம் கிராமத்தில் இரும்பு பொருட்கள் வெடித்து 2 பேர் மற்றும் ஒரு பசுமாடு படுகாயம் அடைந்து இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story