எகிப்து நாட்டில் இருந்து தஞ்சைக்கு 2 டன் வெங்காயம் வந்தது கிலோ ரூ.100-க்கு விற்பனை


எகிப்து நாட்டில் இருந்து தஞ்சைக்கு 2 டன் வெங்காயம் வந்தது கிலோ ரூ.100-க்கு விற்பனை
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 10 Dec 2019 7:01 PM GMT)

எகிப்து நாட்டில் இருந்து தஞ்சைக்கு 2 டன் வெங்காயம் நேற்று வந்தது. கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மார்க்கெட்டுக்கு வெளியூர்களில் இருந்து தினமும் லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கொடைக்கானல், திண்டுக்கல், பொள்ளாச்சி, ஓசூர், தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து தக்காளி, கேரட், உருளைக் கிழங்கு, பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இதே போல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் மராட்டிய மாநிலத்தில் இருந்தும் பல்லாரிஅதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். முன்பு இந்த பகுதிகளில் இருந்து 4 லாரிகளில் பல்லாரி விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் அங்கு சமீபத்தில் பெய்த மழை காரணமாக வெங்காயம் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு உற்பத்தி வெகுவாக குறைந்தது.

விலை உயர்வு

இதனால் அங்கிருந்து பல்லாரி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. தற்போது தினமும் 1 லாரியில் தான் பல்லாரி விற்பனைக்கு வருகின்றன. இதனால் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லாரி கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் சின்ன வெங்காயம் வரத்தும் குறைவாக உள்ளதால் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதன்படி எகிப்து நாட்டில் இருந்து 2 டன் பெரிய வெங்காயம் நேற்று தஞ்சை காமராஜர் மார்க்கெட் வெங்காய மண்டிக்கு வந்தது. இந்த வெங்காயம் பீட்ரூட் நிறத்தில் உள்ளதால் இதனை பீட்ரூட் வெங்காயம் என்று அழைக்கிறார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தொடர்பாக மொத்த வியாபாரி சிதம்பரம் கூறுகையில் ‘எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதால் பெரிய வெங்காயம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், ஓட்டல் அதிபர்கள் வாங்கி சென்று உள்ளனர். ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறோம். இனி வெங்காயம் விலை உயர வாய்ப்பு இல்லை’ என்றார்.

Next Story