சிறுவனை அடித்துக்கொன்று குப்பை கிடங்கில் உடல் புதைப்பு 4 பேரிடம் போலீசார் விசாரணை


சிறுவனை அடித்துக்கொன்று குப்பை கிடங்கில் உடல் புதைப்பு 4 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Dec 2019 11:15 PM GMT (Updated: 10 Dec 2019 7:08 PM GMT)

திருச்சி அரியமங்கலத்தில் சிறுவனை அடித்துக்கொன்று குப்பை கிடங்கில் உடலை புதைத்தனர். இதுதொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் அலியார். இவரது மகன் அப்துல் வாஹித் (வயது 12). 6-ம் வகுப்பு படித்து வந்த அப்துல் வாஹித் சமீபகாலமாக பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. கடந்த 3-ந்் தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுவன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் அப்துல்வாஹித் கிடைக்கவில்லை. அவன் எங்கே சென்றான்? என்ன ஆனான்? என்பது தெரியாமல் பெற்றோர் தவித்தனர். இது குறித்து அலியார் கடந்த 6-ந் தேதி அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சிறுவனை தேடிவந்தனர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சேகர். இவரது மனைவி கயல்விழி. இவர் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார். இத்தம்பதியின் இரண்டாவது மகன் முத்துக்குமார் (26). இவர் பன்றிகள் வளர்த்து வருவதாகவும், அவற்றை பார்க்க அடிக்கடி அப்துல்வாஹித் வருவதும் தெரிந்து, சிறுவன் மீது அவர்கள் மிகவும் கோபமாக இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக முத்துக்குமாரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையின்போது கூறியதாவது:-

எனது அண்ணன்(பெரியப்பா பையன்) சிலம்பரசன் எங்களுடைய பன்றியை அடிக்கடி பிடித்து விற்பனை செய்து வந்தான். அவனுக்கு அப்துல் வாஹித் உதவி செய்வதாக கூறப்பட்டது. குறிப்பாக பன்றிகள் எங்கே நிற்கின்றன என அவன் வேவு பார்த்து சொல்வதாகவும் கூறி னார்கள். இன்னொரு முறை அவன் வந்தால் கட்டி போடுங்கள் என நான் கூறினேன்.

இந்நிலையில் கடந்த 3-ந்் தேதி மாலை அப்துல்வாஹித் எங்கள் பகுதிக்கு வந்தான். அப்போது சரவணன்(19), மற்றும் அவருடைய நண்பர்கள் அவனை பிடித்து கட்டி வைத்து அடித்தனர். இதில் அவன் இறந்து விட்டான். உடனே நான் அப்துல் வாஹித்தின் உடலை அரியமங்கலம் குப்பை கிடங்கில் ேபாட்டுவிடும்படி கூறினேன்.

அதன்படி அவர்கள், அங்கு தீ பிடித்தால் அணைக்க தேவைப்படும் வகையில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில், அப்துல்வாஹித்தின் உடலை கல்லை கட்டி போட்டு, அதில் குப்பைகளை போட்டு மூடி புதைத்து விட்டனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள தொட்டியில் சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தை, போலீசில் சிக்கியவர்கள் அடையாளம் காட்ட காலை முதல் மாலை வரை பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை கிளறி தேடும் படலம் நடந்தது. மாலை 6.15 மணிக்கு சிறுவன் அப்துல் வாஹித் உடலை போலீசார் மீட்டனர்.

பின்னர் தாசில்தார் மோகன் முன்னிலையில், போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் முத்தரசு மற்றும் போலீசார் மேற்பார்வையில் உடல் வெளியே எடுக்கப்பட்டது. சிறுவன் கொலை செய்யப்பட்டு 6 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் உடல் லேசாக அழுகிய நிலையில் காணப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

பன்றி வளர்ப்பு தொடர்பாக சிலம்பரசனுக்கும், முத்துகுமாரின் சகோதரருக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாகவே சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவத்தில் 4 பேர் மீது அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட அப்துல் வாஹித்துக்கு 12 வயது. கொலையாளிகளாக கருதப்படும் அனைவரும் 16 வயது முதல் 19 வயதுடையவர்கள். ரவுடிகளாக மாறும் சிறுவர்கள் விஷயத்தில் திருச்சி மாநகர போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story