‘கத்தி’ பட வழக்கில் நடிகர் விஜய் விடுவிப்பு - டைரக்டர் முருகதாசிடம் விசாரணை நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


‘கத்தி’ பட வழக்கில் நடிகர் விஜய் விடுவிப்பு - டைரக்டர் முருகதாசிடம் விசாரணை நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Dec 2019 3:30 AM IST (Updated: 11 Dec 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

கத்தி பட கதை விவகாரம் தொடர்புடைய வழக்கில் நடிகர் விஜய் விடுவிக்கப்பட்டார். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசிடம் விசாரணை நடத்தி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை, 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் தனது தாகபூமி என்ற குறும்படத்தை திரைப்படமாக வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும், இந்த குறும்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி என்ற பெயரில் சினிமாவாக எடுத்து வெளியிட்டுள்ளதால், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் எனவும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி சிவில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், இதே பிரச்சினைக்காக தஞ்சாவூர் 1-வது குற்றவியல் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம், அதன் நிர்வாக இயக்குனர் நீலகண்ட நாராயணன், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ், கருணாமூர்த்தி, சுபாஸ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், நடிகர் விஜய் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், எங்கள் மீது தஞ்சாவூர் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கத்தி சினிமாவுக்கும், தாகபூமி குறும்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், தாகபூமி குறும்பட கதையை வைத்து கத்தி திரைப்படம் எடுத்துள்ளோம் என்று கூறுவதை ஏற்கமுடியாது. ராஜசேகர் இயக்குனர் முருகதாசிடம் உதவி இயக்குனர் பணி வாய்ப்பு கேட்டு கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு பணிவாய்ப்பு வழங்கப்படாததால், காழ்ப்புணர்ச்சியில் குற்றம் சுமத்துகிறார். இந்த வழக்கு காப்புரிமை சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்புரிமை சட்டம் இந்த வழக்கிற்கு பொருந்தாது. எனவே, தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், கத்தி திரைப்படத்தையும், தாகபூமி குறும்படத்தையும் வழக்கை நடத்தும் தஞ்சாவூர் நீதிபதி பார்க்க வேண்டும். இரு படங்களிலும் புகார்தாரர் கூறும் ஒற்றுமை இருந்தால், உரிய முகாந்திரம் இருப்பின் விசாரணை நடத்தலாம்.

மேலும், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசை மட்டும் எதிர்மனுதாரராக சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனம், நடிகர் விஜய் மற்றும் பிற நபர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story