மத்திய அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்: காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்


மத்திய அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்: காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்
x
தினத்தந்தி 10 Dec 2019 10:45 PM GMT (Updated: 10 Dec 2019 8:51 PM GMT)

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புதுவையில் இன்று(புதன்கிழமை) மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற உள்ளது. இதில் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான மக்கள் விரோத பா.ஜ.க. அரசு நாட்டு மக்களை வஞ்சிக்கும் நோக்கத்துடன் பல்வேறு சட்டங்களை இயற்றி அதை சர்வாதிகாரமாக அமல்படுத்தி வருகிறது.

பணமதிப்பிழப்பு சட்டத்தினால் நாட்டை பாழ்படுத்தி, சரக்கு மற்றும் சேவை வரியை விதித்து சிறு, குறு தொழில்களை சீரழித்து, தவறான பொருளாதார கொள்கையின் மூலம் நாட்டின் வளர்ச்சியை நிலைகுலையச் செய்து இளைஞர்களின் வேலைவாய்ப்பை தட்டி பறித்துள்ளது. இதனால் இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்

இந்த நிலையில் நாட்டு மக்களிடம் பிரிவினையை தூண்டும் நோக்கத்துடன் இந்திய அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், மசோதாவை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு ஆதரவு திரட்டவும், மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கின்ற மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து இன்று(புதன்கிழமை) மாலை 5 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெறஉள்ளது.

இந்த ஊர்வலம் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு அண்ணாசாலை, நேருவீதி, மிஷன்வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைகிறது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத், முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கலந்து கொள்கின்றனர்.

கலந்து கொள்ள வேண்டும்

மத்திய அரசுக்கு பாடம் புகட்ட நடைபெற இருக்கின்ற மெழுகுவர்த்தி ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தவறாமல் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story