செலவு குறைவு என்பதால், பயிர்களில் பூச்சித்தாக்குதலை தடுக்க மதுவை தெளிக்கும் விவசாயிகள்
செலவு குறைவு என்பதால் பயிர்களில் பூச்சித்தாக்குதலை தடுக்க விவசாயிகள் மதுவை பயன்படுத்தி வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தயாரிப்புக்கு அடுத்தபடியாக விவசாயத்தொழிலில் அதிகமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பனியன் நிறுவனத்தை நடத்தி வரும் பலர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே விவசாய தொழிலை ஒரு கண்ணாகவும், பனியன் நிறுவனத்தை மற்றொரு கண்ணாகவும் நினைத்து தொழிலை செய்து வருகிறார்கள்.
இதை தவிர மேலும் பல விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் போதிய மழை கிடக்காதது, பூச்சி, புழுக்கள் தாக்குதல் இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு இன்னல்களால் பல நேரங்களில் நஷ்டத்தையே ஏற்படுத்தினாலும் விடாமல் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தவிர உரத்தட்டுப்பாடு, பூச்சி மருந்தின் விலை அதிகம், கூலி வேலை செய்ய ஆட்கள் கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சி மருந்துக்கு பதிலாக விவசாயிகள் சிலர் மதுவை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.
இது குறித்து விவசாயிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
விவசாய பயிர்களை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேறு சில மாவட்டங்களில் மதுவை உபயோகிப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நாங்களும் 250 மில்லி லிட்டர் பிராந்தி வகை மதுவை வாங்கி 10 லிட்டர் தண்ணீரில் கலந்து சின்ன வெங்காயம் மற்றும் வெண்டை பயிர்களில் தெளித்தோம். இதை தெளித்த 2 மணி நேரத்தில் பூச்சிகள் இறந்து விட்டன. இதனால் தற்போது இதையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். இதனால் எங்களுக்கு செலவு குறைகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மதுசூதனனிடம் கேட்ட போது, திருப்பூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட 3 அல்லது 4 விவசாயிகள் ஒரு சில ஆண்டுகளாக பூச்சி மருந்துக்கு பதிலாக மதுவை தெளித்து வருகிறார்கள். ஒரு ஏக்கருக்கு 1 லிட்டர் மதுவை பயன்படுத்துவதால் பூச்சிகள் மயங்கி விழுந்து விடுவதாகவும், இதனால் வெறும் ரூ.800 செலவில் பூச்சிகளை கட்டுப்படுத்த முடிகிறது என்றும் சொல்கிறார்கள்.
மயங்கி விழுகின்ற பூச்சிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுவதாகவும் கூறுகிறார்கள். மயக்க மடைந்த பூச்சிகளை கொல்ல மீண்டும் மருந்து வாங்க ரூ.500 செலவு செய்ய வேண்டும். இவ்வாறு பயிர்களுக்கு மதுவை தெளிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் எனது தோட்டத்தில் உள்ள பயிர்களுக்கு எந்த காலத்திலும் மதுவை பயன்படுத்த மாட்டேன் என்றார்.
வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் மனோகரனிடம் இதுகுறித்து கேட்ட போது, அவர் கூறியதாவது:-
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் பூச்சி மருந்துக்கு பதிலாக மதுவை பயன்படுத்தி வருகிறார்கள். மது , பூச்சிகளை கட்டுப்படுத்துவதால் தான் அவர்கள் தொடர்ந்து மதுவை பயன்படுத்தி வருகிறார்கள். இது அறிவியல் பூர்வமற்ற முறை. வேளாண்மை பல்கலைக்கழகமும் இதை சிபாரிசு செய்யவில்லை.
இதனால் மண் மற்றும் காய்கறிகளுக்கு எந்த பாதிப்பும் வராது. எனவே இதை நாங்கள் தடை செய்ய முடியாது. பூச்சி மருந்தை காய்கறிகளின் மீது தெளிக்கும் போது அந்த காயை உடனடியாக சாப்பிட முடியாது. மதுவை உபயோகிக்கும் போது அந்த காய்கறிகளை உடனே செடியில் இருந்து பறித்து உபயோகப்படுத்தலாம். இது குறித்து இது வரை எந்த விவசாய பூமியிலும் நாங்கள் சென்று ஆய்வு நடத்தவில்லை. ஆனால் வேளாண்மை ஆய்வு மையத்துக்கு இது குறித்து விசாரிக்கும்படி தகவல் தெரிவிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதுவை குடிக்கும் குடிமகன்கள் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டு இருக்க, மறுபுறம் விவசாயத்திற்கு மது பயன்படுத்தப்படுகிறது. இதனால் வருங்காலத்தில் மதுவுக்கு அதிக கிராக்கி ஏற்பட வாய்ப்பு உ்ளளது என்றால் மிகையில்லை.
Related Tags :
Next Story