பிறப்புச்சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில்


பிறப்புச்சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 10 Dec 2019 11:15 PM GMT (Updated: 10 Dec 2019 10:25 PM GMT)

பிறப்புச் சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள ஏழுசாட்டுப்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானமணி (வயது 71). கூலித்தொழிலாளியான இவர், நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னுடைய மகளுக்கு பிறப்புச் சான்று பெற முடிவு செய்தார். அதற்காக கடந்த 2013-ம் ஆண்டு கன்னியாகுமரி பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகவும், சுகாதார ஆய்வாளராகவும் பணியாற்றிய ராஜேஸ்வரனை (54) சந்தித்து முறையிட்டார். ராஜேஸ்வரன் கொட்டாரம் மிஷன் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.இவர், ஞானமணியிடம் பிறப்புச்சான்று வழங்க தனக்கு ரூ.500 லஞ்சம் தரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஞானமணி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்பேரில் கன்னியாகுமரியில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவு அலுவலகத்துக்கு சென்ற ஞானமணி, அங்கிருந்த ராஜேஸ்வரனிடம் ரூ.500-ஐ லஞ்சமாக கொடுத்தார். அப்போது மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜேஸ்வரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை நாகர்கோவிலில் உள்ள முதன்மை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி அருணாசலம் விசாரித்து வந்தார்.

நேற்று இந்த வழக்கில் அவர் தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஸ்வரனுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துக்குமாரி ஆஜராகி வாதாடினார்.

4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர் ராஜேஸ்வரன் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story