கர்நாடகத்தில், சாலை மேம்பாட்டுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி


கர்நாடகத்தில், சாலை மேம்பாட்டுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் - மத்திய மந்திரி நிதின் கட்காரி பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2019 11:38 PM GMT (Updated: 10 Dec 2019 11:38 PM GMT)

கர்நாடகத்தில் சாலை மேம்பாட்டுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது, இதற்காக நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி தலைமையில் நடைபெற்றது. இதில், முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கர்நாடகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது, நிலங்களை கையகப்படுத்துவது, தற்போது நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன், மத்திய மந்திரி நிதின் கட்காரி விரிவாக ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி நிதின் கட்காரி நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சில திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக பெங்களூரு-புனே இடையே அதிவிரைவு சாலை அமைக்கும் திட்ட பணிகளை தொடங்குவது, அந்த பணிகளை விரைந்து முடிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்டால் கர்நாடகம், மராட்டிய மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தக போக்குவரத்து இன்னும் அதிகமாகும். கர்நாடகத்தில் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் சில தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடும்படி கர்நாடக அரசிடம் தெரிவித்துள்ளேன். கர்நாடகத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து கொடுக்கும். இதற்கு தேவையான நிதி உதவியையும் மத்திய அரசு செய்து கொடுக்கும். இவ்வாறு மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

Next Story