கள்ளக்குறிச்சியில், பூட்டிக்கிடந்த வீட்டில் 7 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு
கள்ளக்குறிச்சியில் பூட்டிக்கிடந்த வீட்டில் 7 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அண்ணா நகர் 2-வது தெருவைச்சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மனைவி சிவசக்தி(வயது57). இவருக்கு பிரதீப் குமார்(28), பிரவீன் குமார்(25) என்ற மகன்கள் உள்ளனர். பிரதீப் குமார் புதுச்சேரியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். பிரவீன்குமார் கள்ளக்குறிச் சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதீப் குமாருக்கு காய்ச்சல் இருந்ததால் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது தாயார் சிவசக்தி நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு மகனுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். இரவில் அவர் மருத்துவமனையிலேயே தங்கி விட்டார்.
இதனால் அவரது வீடு பூட்டிக்கிடந்ததை நோட்ட மிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் சிவசக்தியின் வீட்டின் பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளே புகுந்து, 2 பீரோ மற்றும் அலமாரிகளில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றனர்.
நேற்று காலையில் சிவசக்தி வீட்டுக்கு சென்று பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததையும் வீட்டுக்குள் பீரோ மற்றும் அலமாரிகளில் இருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருட்டுப்போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி சிவசக்தி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் திருட்டு நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story