திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள நகரும் படிக்கட்டுகளுக்கான உபகரணங்கள் வந்தன


திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள நகரும் படிக்கட்டுகளுக்கான உபகரணங்கள் வந்தன
x
தினத்தந்தி 11 Dec 2019 10:45 PM GMT (Updated: 11 Dec 2019 4:34 PM GMT)

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள நகரும் படிக்கட்டுகளுக்கான உபகரணங்கள் திருச்சி வந்தன.

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரூ.30 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரெயில்வே பார்சல் அலுவலகம் அருகே நடைபாதை மேம்பாலம் பக்கமும், இதேபோல கல்லுக்குழியில் நடைபாதை மேம்பாலம் அருகேயும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கின.

இந்த நிலையில் நகரும் படிக்கட்டுகளுக்கான உபகரணங்கள் சென்னையில் இருந்து லாரிகள் மூலம் நேற்று திருச்சி வந்தன. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து இந்த உபகரணங்கள் வந்துள்ளன. மொத்தம் 2 இடங்களில் அமைப்பதற்கான படிக்கட்டுகள், அதனை பொருத்துவதற்கான இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை வந்தன.

3 மாதங்கள்...

இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நகரும் படிக்கட்டுக்கள் அமைப்பதற்கு தற்போது தான் மண் தோண்டப்பட்டு அஸ்திவாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த உபகரணங்களை பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர 3 மாதங்கள் ஆகும். பார்சல் அலுவலகம் மற்றும் கல்லுக்குழி பகுதியில் 2 இடங்களிலும் ஒரே நேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நடைமேடை பாலம் வழியாக ஏறி, இறங்குபவர்கள் நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்த முடியும்’ என்றார்.

Next Story