சங்கரன்கோவில் நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சங்கரன்கோவில் நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் நகரசபை 7-வது வார்டுக்கு உட்பட்டது லட்சுமியாபுரம் 7-வது தெரு பகுதி ஆகும். இந்த பகுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள பல்வேறு குடிநீர் இணைப்புகளுக்கு தண்ணீர் திறந்து விட ஒரு வால்வு மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தண்ணீர் திறந்து விடும் நேரங்களில் முறையாக தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகரசபை அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது தண்ணீர் வரும் நேரங்களில் முறையாக தண்ணீர் வராததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் சங்கரன்கோவில் நகரசபை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அங்கு இருந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பேரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story