திருப்பூர் மாவட்டத்தில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு 500 கிலோ பெரிய வெங்காய விதை - இலவசமாக அடுத்த வாரம் வழங்கப்படுகிறது
திருப்பூர் மாவட்டத்தில் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு 500 கிலோ பெரிய வெங்காய விதை அடுத்த வாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) மணி தெரிவித்தார்.
திருப்பூர்,
தமிழ்நாட்டில் பெரிய வெங்காயம் சாகுபடி இல்லாததால் கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. தற்போது அங்கு சீசன் முடிந்து விட்டதாலும், கடுமையான மழை காரணத்தாலும் வெங்காய வரத்து மிகவும் குறைந்து விட்டது. இதனால் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200-ஐ எட்டிப்பிடித்தது.
இந்த நிலையில் எகிப்து, துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. மேலும் மராட்டிய மாநிலத்தில் இருந்து வெங்காயம் வரத்து தொடங்கிவிட்டதாலும் வெங்காய விலை சிறிது, சிறிதாக குறையத்தொடங்கி உள்ளது. இதனால் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100 வரை குறைந்து விட்டது.
தமிழ்நாட்டில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய தொடங்கினால் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் வாங்கும் நிலை ஏற்படாது என்பதை கருத்தில் கொண்டு அரசு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
அதன்படி தேசிய தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்திடம் இருந்து பெரிய வெங்காய விதைகளை வாங்கி தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் பயிரிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்துக்கு 125 ஏக்கர் பரப்பளவில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய 500 கிலோ விதைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விதைகள் அடுத்த வாரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட வேளாண்மைதுறை துணை இயக்குனர் (பொறுப்பு) மணி கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குடிமங்கலம், காங்கேயம், உடுமலை, பல்லடம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அப்போது சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை இருந்ததால், விவசாயிகள் பெரிய வெங்காயம் சாகுபடி செய்வதை கைவிட்டனர். அதிலிருந்து திருப்பூர் மாவட்டத்தில் பெரிய வெங்காயம் சாகுபடி நின்று விட்டது.
தற்போது பெரிய வெங்காயத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்பட உள்ளது. அதற்காக எல்.883 ரக விதை 500 கிலோ ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த விதைகளை 125 ஏக்கர் பரப்பளவில் பயிரிடும் வகையில் அனைத்து வட்டாரங்களுக்கும் பிரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. பெரிய வெங்காயம் 150 நாள் பயிராகும், இந்த விதைகள் மூலம் 125 ஏக்கரில் 1,000 டன் வெங்காயம் மகசூல் கிடைக்கும். இவ்வாறு தொடர்ந்து பயிரிடும் போது வெங்காய தட்டுப்பாடு நீங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story