பவானி அருகே பரபரப்பு; கை கால் கட்டப்பட்ட நிலையில் வாய்க்காலில் மிதந்த பிணம் - கடத்தி கொன்று வீசினரா? போலீஸ் விசாரணை


பவானி அருகே பரபரப்பு; கை கால் கட்டப்பட்ட நிலையில் வாய்க்காலில் மிதந்த பிணம் - கடத்தி கொன்று வீசினரா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 12 Dec 2019 4:15 AM IST (Updated: 11 Dec 2019 11:00 PM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே வாய்க்காலில் கை கால் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம் மிதந்து வந்தது. மர்மநபர்கள் கடத்திக் கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசினரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பவானி, 

பவானி அருகே கல்பாவி கிராமம் மேலூர் பகுதியில் உள்ள மேட்டூர் இடதுகரை வாய்க்கால் கரையோரம் நேற்று காலை 8.30 மணி அளவில் சிலர் நடந்து சென்று ெகாண்டிருந்தனர். அப்போது துர்நாற்றம் வீசியது. உடனே வாய்க்காலை பார்த்தபோது ஒரு ஆண் பிணம் மிதந்து வந்தது. அதைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுபற்றி பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பிணம் கை கால்கள் கட்டப்பட்டு் முகத்தை துணியால் மூடிய நிலையில் கிடந்தது. இறந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியதால் இறந்து 2 அல்லது 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் பவானி பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் அல்லது மர்மநபர்கள் வெளியூரில் இருந்து கடத்தி வந்து கொலை செய்துவிட்டு கை கால்களை கட்டி பிணத்தை வாய்க்காலில் வீசிவிட்டு சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? அவரை மர்மநபர்கள் கொலை செய்ய காரணம் என்ன?. பவானி பகுதியில் சமீபத்தில் காணாமல் போனவர்கள் யார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாய்க்காலில் ஆண்பிணம் மிதந்தது பவானி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story