நெக்னாமலைக்கு சாலை வசதியில்லாததால் இறந்த தொழிலாளி உடலை டோலி கட்டி தூக்கிச்சென்ற பொதுமக்கள்


நெக்னாமலைக்கு சாலை வசதியில்லாததால் இறந்த தொழிலாளி உடலை டோலி கட்டி தூக்கிச்சென்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 5:30 PM GMT)

வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்துக்கு சாலை வசதியில்லாத நிலையில் இறந்த தொழிலாளி உடலை மருத்துவமனைக்கு 8 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிச்சென்றனர். அவரது கர்ப்பிணி மனைவியையும் தொழிலாளர்கள் மற்றொரு டோலியில் கிராமத்துக்கு தூக்கிச்சென்றனர்.

வாணியம்பாடி, 

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெக்னாமலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 அடி உயரம் உள்ளது. இந்த மலை மீது 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமத்திற்கு சுமார் 60 ஆண்டு காலமாக சாலை வசதி செய்யப்படவில்லை. மற்ற அடிப்படை வசதிகளும் இங்கு சரியான முறையில் இல்லை.

எனவே சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்த கிராமம் ஊராட்சியின் மையமாக உள்ளது. கிராம மக்கள் ஒற்றையடிப்பாதை வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

வேலைவாய்ப்பும் இல்லாததால் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பகுதிகளில் வேலைக்குச் செல்கின்றனர். அவ்வாறு வெளியூரில் வேலைபார்த்த சேட்டு என்பவரது மகன் ரஜினி (வயது 27) என்பவர் மனைவி அனிதா மற்றும் குழந்தையுடன் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு திடீரென மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பின்னர், பிணத்தை பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் அவரது சொந்த ஊரான நெக்னாமலைக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வேன் மூலம் கொண்டு வந்தனர். இந்த மலை அடிவாரம் வரை மட்டுமே வாகனம் செல்லும், அங்கிருந்து பிணத்தை அவர்கள் டோலி மூலம் கட்டி தூக்கி சென்றனர். அதேவேளையில் இறந்துபோன ரஜினியின் மனைவி 8 மாதம் கர்ப்பிணியாக இருப்பதால் அவரையும் அப்பகுதி மக்கள் டோலி கட்டி மேலே தூக்கி சென்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ள இந்த கிராமம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய கிராமம் ஆகும் இந்த கிராமத்தின் அவலத்தை போக்க போதிய சாலை வசதி உள்பட அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story