போதையில் நடந்த தகராறில் நண்பனை மதுபாட்டிலால் குத்திக்கொன்று கிணற்றில் வீசிய வாலிபர் கைது
போதையில் நடந்த தகராறில் நண்பனை மது பாட்டிலால் குத்திக்கொன்று பிணத்தை கிணற்றில் வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை,
சென்னையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கோழிக் கூண்டு செய்யும் அரசு ஒப்பந்ததாரர். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வேணுகோபால் மகன் சரவணன் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் விஜய் (23) ஆகிய 2 பேரை அழைத்துக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரிக்கு வந்தார். இங்கு கோழிக்கூண்டு செய்யும் பணியில் ஈடுபட்டார்.
சரவணன், விஜய் ஆகிய 2 பேரும் கடந்த 4-ந் தேதி மாலை பொன்னேரி பகுதியில் உள்ள வானி ஏரி அருகே மது அருந்தினர். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், சரவணனிடம் இருந்து ரூ.2500 மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டு மது பாட்டிலை உடைத்து சரவணனின் கழுத்தில் குத்தி கொலை செய்தார். பின்னர் உடலை, வானி ஏரி அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றில் சரவணன் வயிற்றில் கல்லை கயிற்றால் கட்டி வீசிவிட்டு சென்னைக்கு தப்பினார்.
இந்நிலையில் சரவணனிடம் இருந்து அவர்களது பெற்றோருக்கு தொடர்பு இல்லாததால் சந்தேகமடைந்த அவர்கள் நண்பரான விஜய்யிடம் விசாரித்தனர். ஆனால் விஜய் எதுவும் சொல்லாததால் ஆத்திரமடைந்த சரவணனின் பெற்றோர் விஜய்யை பிடித்து, ஜோலார் பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் சரவணனின் பெற்றோரை போலீசார் அழைத்து கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.பிண அறையில் வைத்திருந்த கொலை செய்யப்பட்ட அந்த நபரின் உடலை காண்பித்தபோது கொலை செய்யப்பட்டது சரவணன் என்பது உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப் பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர். அதன் பிறகு விஜய் சம்பவ நடந்த இடத்தை காண்பித்தார். பின்னர் போலீசார் விஜய்யை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story