மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் + "||" + About Nilgiris District Local Elections, Advisory meeting with political party representatives

நீலகிரி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

நீலகிரி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, மகளிர் திட்ட இயக்குனர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது கூறியதாவது:-

மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 35 ஊராட்சிகளுக்கும், 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், 59 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக குன்னூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு 27-ந் தேதி 177 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 17 கிராம ஊராட்சி தலைவர், 22 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

2-வது கட்டமாக 30-ந் தேதி 216 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும். 18 கிராம ஊராட்சி தலைவர்கள், 37 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 9-ந் தேதி முதல் வருகிற 16-ந் தேதி மாலை 5 மணி வரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலகத்திலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

தேர்தல் நடைபெற உள்ளதால் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது. நோட்டீஸ் அடித்து வினியோகிக்கும் போது அச்சகத்தின் பெயர் இருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு எந்தவித பாக்கி தொகைகள் வைத்திருக்க கூடாது. குற்ற வழக்குகள் இல்லை என போலீசாரிடம் சான்றிதழ்கள் வாங்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு நேரடியாக, மறைமுகமாக பணம் வழங்க கூடாது. கோவில் உள்பட வழிபாட்டு தலங்களில் வாக்குகள் சேகரிக்கக்கூடாது. கிராம ஊராட்சி எல்லையை ஒட்டி உள்ள நகர்புறங்களில் அரசியல் கட்சி சம்பந்தமான விழாக்கள் நடத்தக்கூடாது.

ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 3 வீதம் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன பிரசாரம், பொதுக்கூட்டம் நடத்த தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். ஓட்டுப்பதிவின் போது வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் வாகனம் நிறுத்த வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்கு மையங்களில் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் மற்றும் வாக்கு எண்ணும் இடத்தில் வேட்பாளர்கள் சார்பில் வரும் ஏஜெண்டுகள் முன்கூட்டியே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை அளித்து அனுமதி பெற வேண்டும்.

ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு தேர்தல் அதிகாரி சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு தேர்தல் அதிகாரி ராமனும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு நந்தகுமாரும், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஜனார்த்தனன் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஊராட்சி தேர்தல் அதிகாரியாக எட்சி லீமாஅமாலிணியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி வழங்கப்பட உள்ளது. இதற்காக மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் ரேண்டம் முறையில் பணியிடங்கள் ஒதுக்கப்படும்.

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதற்கட்டமாக 14 அல்லது 15-ந் தேதி பயிற்சி நடைபெறும். 2-ம் கட்டமாக 21-ந் தேதி ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஒன்றியத்துக்கும், 22-ந் தேதி கூடலூர் ஒன்றியத்துக்கும், 3-ம் கட்டமாக குன்னூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 26-ந் தேதியும், கூடலூர் ஊராட்சி ஒன்றிய வாக்குச்சாவடியில் பணிபுரிபவர்களுக்கு 29-ந் தேதியும் நடைபெறுகிறது.

ஊட்டி பழங்குடியினர் கலாசார மையத்திலும், குன்னூர் சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும். கோத்தகிரி புயல் நிவாரண மையத்திலும். கூடலூரில் மார்னிங் ஸ்டார் பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 3,033 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.