பல ஆண்டுகளுக்கு பின்னர் கறம்பக்குடி சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு


பல ஆண்டுகளுக்கு பின்னர் கறம்பக்குடி சிவன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 7:12 PM GMT)

பல ஆண்டுகளுக்கு பின்னர் கறம்பக்குடி சிவன் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி முகூர்த்தகால் நடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சாமியின் பெயர் ஆனந்தேஸ்வரமுடையார், அம்மனின் பெயர் அகிலாண்டேஸ்வரி. வரலாற்று சிறப்பும், பழமை மிக்கதுமான இந்த கோவில் பல ஆண்டு களாக சீரமைக்கப்படாமல் சிதலமடைந்திருந்தது. ராஜகோபுரம் உள்ளிட்ட கோவில் மூலஸ்தான விமானங்களும் இடிந்த நிலையில் கிடந்தன. இந்த கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என பல தலை முறைகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் பல்வேறு காரணங்களால் கோவில் புனரமைப்பு பணி மற்றும் கும்பாபிஷேகம் தடைப்பட்டு வந்தது. கடந்த 100 ஆண்டுகளில் பலமுறை முயற்சி செய்தும் பணிகள் தடைப்பட்டு வந்தன. வருவாய் இல்லாத கோவில் என அறநிலையத்துறை அதிகாரிகளும் இந்த கோவிலை கண்டு கொள்ள வில்லை. இதனால் அப்பகுதி பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்திருந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி‘யில் கோவில் வரலாற்றுடன் செய்தி வெளியிடப்பட்டது.

முகூர்த்தகால்

இந்நிலையில் கறம்பக்குடி சிவன் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவது என பொதுமக்களால் அமைக்கப்பட்ட திருப்பணி கமிட்டியினர் முடிவு செய்தனர். இதற்கு இந்து அறநிலைய துறையிடம் அனுமதி பெறப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று சிவன் கோவில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. கட்டிடக்குழு தலைவர் விஜயரவி பல்லவராயர் தலைமையில், முகூர்த்தகால் நடப்பட்டது. இதில் கறம்பக்குடி பகுதி பொதுமக்கள், பக்தர்கள், சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டனர். பல ஆண்டுகளாக இருந்த மனக்குறை தீர போவதை எண்ணி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story