ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை


ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 11 Dec 2019 10:15 PM GMT (Updated: 11 Dec 2019 7:33 PM GMT)

ஆவடி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

ஆவடி, 

ஆவடியை அடுத்த அண்ணனூர் சிவசக்தி நகரை சேர்ந்தவர் வரதன் (வயது 62). அரசு கருவூலத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பத்மினி (58). இந்நிலையில் கடந்த 4-ந் தேதி வரதன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை மேடவாக்கத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அக்கம்பக்கத்தினர் வரதனுக்கு தகவல் கூறி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வரதன் கொடுத்த புகாரின் பேரில், திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

அதே போல், திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் அபர்ணா நகர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி அமுதவல்லி (44). இவர் அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். அமுதவல்லி நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்று விட்டார்.

பின்னர், மதியம் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினார். இதையடுத்து அமுதவல்லி ‘திருடன் திருடன்’ என கூச்சலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் இருந்து தப்பி ஓடிய நபரை பிடித்து, திருமுல்லைவாயல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர், சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த உதயா (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story