ஈரோடு ஒன்றியக்குழு அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பெண் வேட்புமனு - கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 4 பேர் மனுதாக்கல் செய்தனர்
ஈரோடு ஒன்றியக்குழு அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பெண் ஒருவர் வேட்புமனு செய்தார். ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 4 பேர் மனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த 9-ந் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சி அலுவலகங்கள், 14 ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எலவமலை, கதிரம்பட்டி, பேரோடு, மேட்டுநாசுவம்பாளையம், கூரபாளையம், பிச்சாண்டம்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகளின் தலைவர் பதவிகள், 6 ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிகள், மாவட்ட ஊராட்சிக்குழு (வார்டு எண் 14) கவுன்சிலர் பதவி ஆகியவற்றுக்கு ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களிலேயே வேட்புமனுக்கள் வாங்கப்படுகின்றன.
தேர்தல் நடத்தும் அதிகாரி சிவசங்கர் தலைமையில் வேட்பு மனு பெறும் அதிகாரிகள் வேட்புமனுக்களை பெற்று வருகிறார்கள். நேற்று காலை 10 மணி முதல் வேட்பாளர் வருகையை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்து இருந்தனர். இங்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் பதவிக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் கொங்கு கோவிந்தராசுவின் மனைவி சித்ரா என்பவர் வேட்புமனுதாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உடன் வந்தனர். மனுவை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி டி.ஜெகன் பெற்றுக்கொண்டார். இவரைத்தவிர வேறு யாரும் ஈரோடு ஒன்றியக்குழு அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை.
ஈரோடு ஒன்றியத்துக்கு உள்பட்ட கதிரம்பட்டி ஊராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாலசுப்பிரமணியன் என்பவரும், 7-வது வார்டுக்கு ஜோதி என்ற பெண்ணும் வேட்புமனு தாக்கல் செய்தனர். உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ்.ரமேஷ் மனுக்களை பெற்றுக்கொண்டார். எலவமலை ஊராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ராஜேந்திரன் என்பவர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சந்திரசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பேரோடு 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தமிழ்ச்செல்வி என்பவர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.கணேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவ்வாறு ஈரோடு ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 4 பேர் வேட்புமனுதாக்கல் செய்து இருந்தனர்.
வேட்புமனுதாக்கல் நிகழ்வையொட்டி ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதேபோல் பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு நேற்று வரை 36 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 228 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கவுன்சிலர் பதவிகளுக்கு நேற்று வரை 5 பேரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 7 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேரும் என மொத்தம் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story