மீன்பிடிக்க சென்ற போது படகு மூழ்கியது: ஆழ்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் உள்பட 17 பேர் மீட்பு


மீன்பிடிக்க சென்ற போது படகு மூழ்கியது: ஆழ்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் உள்பட 17 பேர் மீட்பு
x
தினத்தந்தி 11 Dec 2019 11:15 PM GMT (Updated: 11 Dec 2019 7:51 PM GMT)

தேங்காப்பட்டணத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற போது படகு மூழ்கியதால், ஆழ்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் உள்பட 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

குளச்சல்,

கேரள மாநிலம் முனம்பம் பகுதியை சேர்ந்த எபி என்பவருக்கு சொந்தமான விசைப்படகு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 9-ந் தேதி இரவு 10 மணிக்கு விசைப்படகின் பங்குதாரரான டான், கோடிமுனையை ேசர்ந்த ததேயுஸ், குளச்சலை சேர்ந்த மைக்கேல், கன்னியாகுமரி லூக்காஸ், வசந்த், அருள், கண்ணையா, கபில், மணக்குடியை சேர்ந்த ஜாக்சன், குழித்துறையை சேர்ந்த ஜார்ஜ் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 2 பேர், வங்காளதேசத்தை சேர்ந்த 5 பேர் என 17 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றனர்.

என்ஜின் பகுதியில் உடைப்பு

நேற்று முன்தினம் மாலை இவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். மீன்களுக்கு வீசிய வலையை இழுத்தபோது, வலை படகின் என்ஜினில் எதிர்பாராதவிதமாக சிக்கியது.

இதனால் அவர்கள் தொடர்ந்து படகை இயக்க முடியாமல் தவித்தனர். மேலும், என்ஜின் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் படகுக்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் குளச்சல் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

படகு மூழ்கியது

உடனே, கடலில் பரிதவித்த மீனவர்களை மீட்பதற்காக கன்னியாகுமரியில் இருந்து 2 விசைப்படகுகள், குளச்சலில் இருந்்து ஒரு விசைப்படகில் மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்.

இதற்கிடையே முட்டத்தில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் இருந்த போது திடீரென பழுதான விசைப்படகு கடலில் மூழ்கியது. இதனால் 17 மீனவர்களும் கடலில் மூழ்கி தத்தளித்தனர்.

மீனவர்கள் மீட்பு

இந்த சமயத்தில், மீட்க சென்ற மீனவர்களும் அந்த பகுதிக்கு சென்று விட்டனர். உடனே அவர்கள், கடலில் தத்தளித்தவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அனைவரையும் படகில் ஏற்றி குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

கடலில் மூழ்கிய 17 மீனவர்கள் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் குமரி மாவட்ட மீனவ கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதே சமயத்தில், துரிதமாக செயல்பட்டு கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மேலும் இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story