ஓடும் பஸ்சில் நெல்லை மாணவிகளிடம் சில்மிஷம் செய்த வாலிபர் - போலீசார் மடக்கி பிடித்து எச்சரித்து அனுப்பினர்
ஓடும் பஸ்சில் நெல்லை மாணவிகளிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி படிக்கும் 20 மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு சென்றனர். இரவு 7 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து ஒன் டூ ஒன் பஸ்சில் நெல்லைக்கு புறப்பட்டனர். இந்த பஸ்சில் நடத்துனர் கிடையாது. சில மாணவிகள் பஸ் டிரைவர் இருக்கைக்கு பின்புறம் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அதற்கு அடுத்த இருக்கையில் மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், மாணவிகளிடம் சில்மிஷம் செய்ய தொடங்கினார்.
இதனால் பதறிப்போன மாணவிகள் இதுகுறித்து உடன் வந்த சக மாணவர்களிடம் கூறினர். உடனே மாணவர்களும், பயணிகளும் அந்த வாலிபரை எச்சரித்தனர். ஆனாலும் அந்த வாலிபர் சில்மிஷத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து அவர் ஆபாசமாக பேச தொடங்கினார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாணவிகள் திகைத்து நின்றனர்.
அப்போது ஒரு மாணவர், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணனை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அந்த நேரத்தில், பஸ் டக்கரம்மாள்புரம் அருகே வந்து கொண்டிருந்தது. துணை கமிஷனர் சரவணன் துரிதமாக செயல்பட்டு புதிய பஸ் நிலைய போலீசாருக்கும், மேலப்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த பஸ்சை எதிர்நோக்கி புதிய பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த பஸ் வந்ததும் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story