வேலூரில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் குடோனில் தீ விபத்து


வேலூரில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 11 Dec 2019 10:00 PM GMT (Updated: 11 Dec 2019 8:30 PM GMT)

வேலூரில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட தீயை சுமார் 1 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

வேலூர், 

வேலூர்-ஆரணி சாலையில் ஊரீசு கல்லூரிக்கு சொந்தமான வணிகவளாகம் உள்ளது. இங்குள்ள தரை, முதல் தளங்களில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதில், 4 கடைகளை வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். அவர் தரைதளத்தில் உள்ள 2 கடைகளில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள 2 கடைகளை இருசக்கர வாகன உதிரிபாகங்கள் வைத்திருக்கும் குடோனாக பயன்படுத்தினார்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் முதல்தளத்தில் உள்ள ராமச்சந்திரனின் குடோன் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. தொடர்ந்து தீ மள, மளவென்று பற்றி எரிந்து குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திக் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக அப்பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் குடோனின் ஷட்டரை உடைத்து உள்ளே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

இதற்கிடையே கொழுந்து விட்டு எரிந்த தீ அருகேயுள்ள குடோனுக்கும் பரவியது. அதனால் அந்த குடோனின் ஷட்டரையும் தீயணைப்பு வீரர்கள் உடைத்து தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் முற்றிலும் தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஒரு குடோனில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. அதன் சேதம் மதிப்பு குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஆரணி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.

மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும்பொருட்டு அந்த சாலை வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன. தீ விபத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? என்பது குறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story