திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முன்பு குடியுரிமை திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம்


திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முன்பு குடியுரிமை திருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 8:30 PM GMT)

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி முன்பு குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். தொடர்ந்து மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், 

குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு எளிதாக நிறைவேறியது. இந்த மசோதா இந்திய மக்களை மத அடிப்படையில் பிளவுப்படுத்தும் வகையில் உள்ளது.

 மேலும், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிராகவும் உள்ளது எனக்கூறியும், குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரியும் இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று காலை இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். தொடர்ந்து மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதில் மாணவர் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் நிருபன் சக்கரவர்த்தி, திருப்பூர் மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது, மாவட்ட தலைவர் பிரவின் குமார், கிளைச்செயலாளர் கல்கிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story