திருப்பூரில் பார் உரிமையாளரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய 5 பேர் கைது - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்


திருப்பூரில் பார் உரிமையாளரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய 5 பேர் கைது - போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 11 Dec 2019 11:15 PM GMT (Updated: 11 Dec 2019 8:30 PM GMT)

திருப்பூரில் பார் உரிமையாளரை தீர்த்துக்கட்ட பதுங்கி இருந்த சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஏலம் எடுப்பது தொடர்பான முன்விரோதத்தில் தீர்த்து கட்ட திட்டமிட்டதுபோலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

அனுப்பர்பாளையம், 

சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்தூரை அடுத்த குமானி கிராமத்தை சேர்ந்தவர் தனபாலன் (வயது 39). இவர் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பூர் பி.என்.ரோடு மும்மூர்த்திநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் இவர் திருப்பூரில் டாஸ்மாக் பார்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் மர்ம ஆசாமிகள் 2 பேர் தனபாலன் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அந்த 2 மர்ம ஆசாமிகளால் எனக்கும், எனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனபாலனை பின்தொடர்ந்து வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் வண்டவாசி பகுதியை சேர்ந்த அழகு பாண்டி மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

மேலும் அந்த 2 பேர் மட்டுமின்றி 10-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று தனபாலை கொலை செய்வதற்காக கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் திருப்பூர் அருகே தங்கி இருந்ததும் தெரிந்தது. போலீசாரிடம் சிக்கிய 2 பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனபாலன் அவருடைய சொந்த ஊருக்கு சென்றபோது ஒரு கும்பல் அவருடைய காரை வழிமறித்து அவரை கடத்தி சென்று ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஒரு சிலருக்கு தனபால் மீது முன்விரோதம் இருந்துள்ளது. இதேபோல் தனபாலின் சொந்தஊர் அருகே டாஸ்மாக் பார் ஏலம் எடுப்பது தொடர்பாக அவருக்கும் ஒரு கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே அந்த கும்பல் தனபாலை தீர்த்துக் கட்ட திட்டம் திட்டி திருப்பூர் பகுதியில் பதுங்கி இருந்ததும், தனபாலனை கண்காணிக்க அழகுபாண்டி மற்றும் சிறுவனை அனுப்பியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

2 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தனபாலனை கொலை செய்வதற்காக பதுங்கி இருந்த கும்பல் இங்கிருந்து சொந்த ஊருக்கு தப்பிசென்றது. கைது செய்யப்பட்ட 2 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்ற அனுப்பர்பாளையம் போலீசார் ஈஸ்வரன் (32), தீர்த்தகுமார் (28), மற்றொரு அழகுபாண்டி (23) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் ஏற்கனவே கொலை வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூரில் பார் உரிமையாளரை கொலை செய்வதற்காக பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story