கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி சேலத்தை சேர்ந்தவர் கைது


கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.76 லட்சம் மோசடி சேலத்தை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2019 10:15 PM GMT (Updated: 11 Dec 2019 8:31 PM GMT)

கூட்டுறவு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்கில் சேலத்தை சேர்ந்தவரை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் பிரபுராஜ் (வயது 27). பொறியியல் பட்டதாரி. இவருக்கு சேலம் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த ரமே‌‌ஷ் (50) என்பவர் ஓட்டலில் சாப்பிடும் போது பழக்கமாகி உள்ளார். அப்போது அவர் கூட்டுறவு துறைக்கு உட்பட்ட வேளாண் சங்கத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு ரூ.7 லட்சம் வரை செலவாகும் எனவும் தெரிவித்து உள்ளார்.

மேலும் வேலையின்றி இருப்போர் பற்றி தெரிவித்தால், சேலம் பள்ளப்பட்டி ஒருங்கிணைந்த வேளாண் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த அரியானூர் பழனிசாமி மூலம் வேலை வாங்கி தருவதாக கூறியதாகவும் தெரிகிறது.

போலீசில் புகார்

இதை நம்பி பிரபுராஜ் அவரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து உள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதுடன், வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தார்.

இதுகுறித்து பிரபுராஜ் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.76 லட்சம் மோசடி

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பிரபுராஜ் மற்றும் மல்லசமுத்திரம், காளிப்பட்டி பகுதியை சேர்ந்த 15 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.76 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே அரியானூரை சேர்ந்த அ.தி.மு.க.பிரமுகர் பழனிசாமியிடமும், இந்த மோசடி தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story