மாவட்ட செய்திகள்

பா.ஜனதாவும், சிவசேனாவும் மீண்டும் இணைய வேண்டும் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி + "||" + Chandrakant Patil Interview

பா.ஜனதாவும், சிவசேனாவும் மீண்டும் இணைய வேண்டும் சந்திரகாந்த் பாட்டீல் பேட்டி

பா.ஜனதாவும்,  சிவசேனாவும்  மீண்டும்  இணைய வேண்டும்  சந்திரகாந்த்  பாட்டீல்  பேட்டி
பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் மீண்டும் இணைய வேண்டும் என பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.
மும்பை

மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து, முதல்-மந்திரி பதவிக்காக நடந்த குடுமிப்பிடி சண்டையின் காரணமாக பாரதீய ஜனதா உடனான கூட்டணியை முறித்து கொண்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. கொள்கையில் முரண்பட்ட 3 கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் நீண்டகாலம் நீடிக்காது என பாரதீய ஜனதா கூறி வருகிறது.

புதிய அரசாங்கம் அமைந்து 2 வாரம் ஆகிவிட்ட நிலையிலும், இன்னும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடோ, மந்திரி சபை விரிவாக்கமோ செய்யப்படவில்லை. இதில் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், நேற்றுமுன்தினம் சிவசேனா மூத்த தலைவர் மனோகர் ஜோஷி விரைவில் பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. அது தொடர்பாக உத்தவ் தாக்கரே சரியான முடிவு எடுப்பார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மீண்டும் இணைய வேண்டும்

இந்தநிலையில் பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் மீண்டும் இணைய வேண்டும் என பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் 30 வருட இயற்கையான கூட்டாளிகள். 2 கட்சிகளுக்கும் ரத்தமும், இந்துத்வாவும் பொதுவானது.

இந்த 2 கட்சிகளும் சேர்ந்து தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது மக்களின் தீர்ப்பு. அதன்படி பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி தான் ஆட்சி அமைத்து இருக்க வேண்டும்.

மனோகர் ஜோஷி கூறியது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் மீண்டும் கைகோர்க்க வேண்டும் என எதிர்பார்ப்பு இருக்கிறது. இது நம்பிக்கை மட்டுமே. ஆனால் இது நடக்குமா, இல்லையா என்பது எனக்கு தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டியத்தில் மீண்டும் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி குறித்து 2 கட்சி தலைவர்களும் அடுத்தடுத்து கருத்துகளை தெரிவித்து இருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...