குன்னூர் அருகே, மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி தீவிரம்


குன்னூர் அருகே, மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:00 PM GMT (Updated: 11 Dec 2019 9:05 PM GMT)

குன்னூர் அருகே மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குன்னூர், 

குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆனைப்பள்ளம், சின்னாகோம்பை, சடையன் கோம்பை ஆகிய ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து ஆதிவாசி மக்களின் கோரிக்கை ஏற்று பேரூராட்சி சார்பில் ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதனால் இந்த பணிகளை பாதியில் நிறுத்தப்பட்டன. மழையின் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, சாலையில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்தன. இதனைதொடர்ந்து சேதமடைந்த சாலையை உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார், தலைமை எழுத்தர் ஜெகதி‌‌ஷ் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது மண்சரிவு மட்டுமின்றி, சாலையின் ஒரு பகுதி சேதமடைந்து இருப்பதும் தெரியவந்தது. இதன் காரணமாக 3 ஆதிவாசி கிராம மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போர்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையில் கிடக்கும் மண், பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சாலையை சீரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த சாலையில் அனைத்து பணிகளும் முடிந்து வருகிற ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story