கொத்தனாரை அடித்து கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகம் - மனைவி-மகன்கள் கைது


கொத்தனாரை அடித்து கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகம் - மனைவி-மகன்கள் கைது
x
தினத்தந்தி 12 Dec 2019 4:00 AM IST (Updated: 12 Dec 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப தகராறில் கொத்தனரை அடித்துக்கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

இளையான்குடி,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சூராணம் காலனியை சேர்ந்தவர் கர்ணன்(வயது 45). கொத்தனார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இவரது மகன் பிரகாஷ்ராஜ். இவருக்கு சரிவர படிப்பு வராததையடுத்து தற்போது எலக்ட்ரீயனாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கர்ணன், அவரது மகன் பிரகாஷ்ராஜ் செய்து வரும் வேலையை விட்டு விட்டு மீண்டும் படிக்க வலியுறுத்தி வந்தார்.

இதுகுறித்து கர்ணன், அவரது மனைவி செல்வராணியிடம் கூறி குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதேபோல் நேற்றும் மகன் மற்றும் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ்ராஜ் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து அவரது தந்தை கர்ணனை அடித்தார்.

இதையடுத்து அவரது அண்ணன் பிரவீன்குமார் மற்றும் தாயார் செல்வராணி ஆகியோரும் சேர்ந்து கர்ணனை தாக்கியதாக தெரிகிறது. இதில் கர்ணன் பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் கர்ணன் இறந்தார்.

இதையடுத்து அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்த அவர்கள் குடும்ப பிரச்சினையில் கர்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி அவரது உடலை அடக்கம் செய்ய முயன்றனர். ஆனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் இது குறித்து இளையான்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கர்ணனை கட்டையால் அடித்துக்்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து செல்வராணி, பிரகாஷ்ராஜ், பிரவீன்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story