பட்டாசு வெடித்த போது பரிதாபம்: மாட்டு கொட்டகையில் தீ விபத்து; கன்றுக்குட்டி, கோழிகள் கருகின


பட்டாசு வெடித்த போது பரிதாபம்: மாட்டு கொட்டகையில் தீ விபத்து; கன்றுக்குட்டி, கோழிகள் கருகின
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 9:25 PM GMT)

திருவொற்றியூரில் மாட்டு கொட்டகையில் பட்டாசு விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் கன்றுக்குட்டி, உயர்ரக கோழிகள் தீக்கிரையாகின.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் கார்கில் நகர் முகிலன் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் வீட்டின் அருகே மாட்டு கொட்டகை அமைத்து, அதில் மாடுகள் மற்றும் உயர்ரக கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் கார்த்திகை தீபம் என்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக தெரிகிறது.

இந்தநிலையில், நள்ளிரவு 12 மணியளவில் ராக்கெட் பட்டாசு ஒன்று, மாட்டு கொட்டகையில் இருந்த வைக்கோல் மீது விழுந்ததில், தீ விபத்து ஏற்பட்டது. தீப்பற்றி எரிவதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே ஓடிவந்து தீ அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

கோழிகள் கருகின

இதுகுறித்து உடனடியாக திருவொற்றியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் தீ அருகிலுள்ள வீடுகளுக்கு பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை வேகமாக அணைத்தனர்.

ஆனால், இந்த விபத்தில் கன்றுக்குட்டி மற்றும் 20-க்கு மேற்பட்ட உயர்ரககோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. மேலும் மாட்டு கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த 13 பசுமாடுகள், 4 கன்றுக்குட்டிகளுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனால் சுமார் ரூ.2 லட்சம் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story