மாவட்ட செய்திகள்

மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி டிரைவர், கண்டக்டர் கைது + "||" + Municipal bus kills schoolboy caught in the wheel

மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி டிரைவர், கண்டக்டர் கைது

மாநகர  பஸ்  சக்கரத்தில் சிக்கி  பள்ளி மாணவன்  பலி  டிரைவர்,  கண்டக்டர்  கைது
மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியானார். இதுதொடர்பாக பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,

சென்னை வேளச்சேரியில் இருந்து தியாகராயநகருக்கு நேற்று காலை மாநகர பஸ் (தடம் எண்: எம்9எம்) புறப்பட்டது. காலை நேரம் என்பதால் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலர் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள பஸ் நிலையத்துக்குள் பஸ் நுழைந்தது. பஸ்சை நிறுத்துவதற்கு முன்பே படியில் தொங்கியபடி சென்ற மாணவர்கள் முன்பக்க படிக்கட்டு வழியாக கும்பலாக இறங்கினர். அப்போது ஒரு மாணவன் தவறி கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் அதே பஸ்சின் பின்பக்க சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியது.

மாணவன் சாவு

இதைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறினர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவனை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

டிரைவர் கைது

இது குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், பலியான பள்ளி மாணவன், வேளச்சேரி எம்.ஜி.ஆர். நகர் பழனியப்பா தெருவை சேர்ந்த குமார் என்பவரது மகன் சரண் (வயது 11) என்பதும், இவர் தியாகராயநகர் பனகல் பார்க்கில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் ஆதம்பாக்கம் பணிமனையை சேர்ந்த மாநகர பஸ் டிரைவர் திருஞானசம்பந்தம் (38), கண்டக்டர் செந்தில்குமார் (49) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...