உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி மாற்றத்துக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி உண்ணாவிரதம்


உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி மாற்றத்துக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏற்றி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:15 PM GMT (Updated: 11 Dec 2019 9:48 PM GMT)

கொட்டாம்பட்டி அருகே வாக்குச்சாவடி மையம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் உண்ணாவிரதம் மேற்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொட்டாம்பட்டி,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி யூனியனில் உள்ள கம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகற்பூரம்பட்டி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு செயல்பட்டுவந்த வாக்குச்சாவடி மையம் முன்னறிவிப்பின்றி கம்பூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த கிராமத்தில் வசிக்கும் 700-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சுமார் 4 கி.மீ. தொலைவிலுள்ள கம்பூர் கிராமத்தில் செயல்படும் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கும் நிலை உள்ளது.

இதுநாள் வரை சொந்த ஊரில் வாக்குச்செலுத்தி வந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் உள்பட அனைத்து தேர்தலிலும் செயல்பட்டு வந்த வாக்கு மையம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அதனை தொடர்ந்து சின்னகற்பூரம்பட்டியிலுள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில ஊர் மந்தையில் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையிலான போலீசார், கொட்டாம்பட்டி யூனியன் ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் வாக்குச்சாவடி மாற்றம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story