புதுச்சேரி-சென்னை இடையே மெமூ ரெயில் இயக்கம்


புதுச்சேரி-சென்னை இடையே மெமூ ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 10:28 PM GMT)

புதுச்சேரி-சென்னை இடையே மெமூ ரெயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.

புதுச்சேரி,

புதுவை-சென்னை இடையே நாள்தோறும் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு 11 மணி அளவில் புதுச்சேரி வந்து சேரும். அதேபோல் பிற்பகல் 3.35 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றடையும்.

இந்த ரெயில்கள் 2-ம் மெமூ ரெயில்களாக (மெயின் லைன் எலக்ட்ரிக்கல் மல்டிபில் யூனிட்) மாற்றப்பட்டுள்ளன. நேற்று முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.

வழக்கமாக இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலில் 10 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் மெமூ ரெயில்களில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து பெட்டிகளிலும் பயோ டாய்லெட்டுகள் உள்ளன.

மேலும் பயணிகள் அமர வசதியான இருக்கைகள், முதல் பெட்டியிலிருந்து கடைசி பெட்டிவரை ரெயிலுக்குள்ளேயே சென்றுவரும் வசதி போன்றவை உள்ளன. இந்த ரெயிலை பார்வையிட்டு ஆய்வு செய்த தென்னக ரெயில்வேயின் ஆலோசனை குழு உறுப்பினர் மோகன்குமார் கூறியதாவது:-

கிராசிங் லைன்

புதுச்சேரி ரெயில் நிலையத்தின் தரத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளோம். தற்போது வில்லியனூர், வளவனூர் ரெயில்நிலையங்களில் ரெயில் செல்ல ஒரேயொரு லைன்தான் உள்ளது. இதனால் ரெயில்கள் கிராசிங் செய்ய முடியவில்லை. அங்கு ரெயில்கள் கிராசிங் செய்ய கூடுதலாக மற்றொரு லைன் அமைக்க வலியுறுத்தி உள்ளோம்.

அதற்கு ரெயில்வே துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் ரூ.4.60 கோடி செலவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த பணிகள் நடந்தால் கூடுதலாக ரெயில்களை இயக்க முடியும்.

வில்லியனூர் பகுதியில் திருக்காமீ சுவரர் கோவில், வில்லியனூர் மாதாகோவில், ஊசுடு ஏரி போன்ற சுற்றுலா தலங்கள் இருப்பதால் வில்லியனூர் ரெயில் நிலையம் இன்னும் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story