10 ஆண்டுகளுக்கு பிறகு, காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


10 ஆண்டுகளுக்கு பிறகு, காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 11 Dec 2019 10:45 PM GMT (Updated: 11 Dec 2019 11:33 PM GMT)

வெம்பக்கோட்டை பகுதியாக செல்லும் காயல்குடி ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் விவசாய பணிகள் சூடு பிடித்துள்ளன.

தாயில்பட்டி,

இந்த மாவட்டம் மழை மறைவு பகுதியாக மாறி இருந்த நிலையில் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் ராஜபாளையம் மற்றும் சிவகிரி பகுதியில் பருவமழை வெளுத்து வாங்கி விட்டது. இதனால் அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் வெம்பக்கோட்டை பகுதியை வளம் கொழிக்கச்செய்கிறது.

அந்த பகுதியில் இருந்து வரும் தண்ணீர் பல ஓடைகள் வழியாக காயல்குடி ஆற்றில் சங்கமிக்கிறது. சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் காயல்குடி ஆற்று நீர் வெம்பக்கோட்டை அணையில் சங்கமிக்கிறது. இதன் குறுக்கே நதிக்குடி, புலிப்பாறைப்பட்டி, திருவேங்கடபுரம் ஆகிய 3 இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. இவை 3-ம் இந்த ஆண்டு நிரம்பி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெம்பக்கோட்டை அணைக்கு தண்ணீர் வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு காயல்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த ஆறு வறண்டு கிடந்தபோது மாதாங்கோவில்பட்டி, எதிர்கோட்டை, புலிப்பாறைப்பட்டி கிராமத்தினர் ஒன்று திரண்டு நிதி திரட்டி ஓடைகளையும் ஆற்றுப்பகுதிகளையும் தூர்வாரி புனரமைத்து இருந்தனர். அதற்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் 4 ஆண்டுகளுக்கு பிறகு விவசாய பணிகளை முழுவீச்சில் தொடங்கி இருக்கின்றனர். நதிக்குடி, ஆத்தூர், திருவேங்கடபுரம், புலிப்பாறைப்பட்டி, புளியம்பட்டி, எதிர்கோட்டை, கங்கர்செவல், குண்டாயிருப்பு உள்ளிட்ட கிராமத்தினர் பருத்தி, கத்தரி, சூரியகாந்தி, மக்காச்சோளம், மிளகாய் போன்றவற்றையும் பயிரிட்டுள்ளனர். கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விட்டதால் நெற்பயிரும் பயிரிடப்படுகிறது.

சிவகாசி நகரின் குடிநீர் ஆதாரங்களில் பிரதானமானது வெம்பக்கோட்டை அணை தண்ணீராகும். அந்த அணை முற்றிலும் வறண்டு கிடந்த நிலையில் தற்போது தண்ணீர் தேங்கி வருகிறது. 24 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 11 அடியை தாண்டி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் நீர்மட்டம் இன்னும் உயர வாய்ப்பு உள்ளது. இந்த அணையை நம்பியுள்ள ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. ஆனாலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளில் தண்ணீர் இருப்பதால் அதை நம்பி விவசாய பணிகள் சூடுபிடித்துள்ளது.

காயல்குடி ஆற்றில் தண்ணீர் வந்தாலும் இந்த பகுதியில் உள்ள வைப்பாறு தொடர்ந்து வறண்டே காணப்படுகிறது. கழுகுமலை மற்றும் சங்கரன்கோவில் பகுதியில் மழை அதிக அளவு பெய்தால்தான் இதில் தண்ணீர் வரும். ஆனால் இந்த ஆண்டு அந்த பகுதியில் திருப்திகரமான அளவுக்கு மழை இல்லாததால் வைப்பாற்றில் தண்ணீர் வரவேயில்லை.

Next Story