முன்னாள் எம்.எல்.ஏ. மகனிடம் ரூ.5¼ லட்சம் மதிப்புள்ள கார் மோசடி 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு


முன்னாள் எம்.எல்.ஏ. மகனிடம் ரூ.5¼ லட்சம் மதிப்புள்ள கார் மோசடி 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 3:53 PM GMT)

முன்னாள் எம்.எல்.ஏ. மகனிடம் ரூ.5¼ லட்சம் மதிப்பிலான காரை மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

திருச்சி மாவட்டம், தொட்டியம் சீனிவாசநல்லூர் அருகே உள்ள மகேந்திரமங்கலத்தை சேர்ந்தவர் காத்தமுத்து. இவர், தொட்டியம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவரது மகன் காமராஜ் (வயது 55). இவர், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் அளித்தார். அதில், கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் கார்களை வாங்கி, விற்கும் நிறுவனத்தை இளங்கோ என்கிற சுந்தரமூர்த்தி, சதீஷ் என்கிற பூபதிராஜா ஆகியோர் நடத்தி வந்தனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புடைய எனது காரை விற்பதற்காக இளங்கோ, சதீஷின் நிறுவனத்தில் கொடுத்து சென்றேன். பின்னர் சில வாரங்கள் கழித்து அங்கு சென்று கேட்டபோது கார் விற்பனை பற்றி அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.

2 பேர் மீது வழக்கு

தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி அன்று அவர்களது நிறுவனத்திற்கு நேரில் சென்ற போது, அது பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதையடுத்து இளங்கோ, சதீஷை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் என்னிடம் காரை வாங்கிவிட்டு அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது.

எனவே அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அம்சவேணி, இந்திய தண்டனை சட்ட பிரிவு 420-ன் (மோசடி) கீழ் இளங்கோ, சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story