மாவட்ட செய்திகள்

கூடலூர் பகுதியில் நெல் மகசூல் அமோகம், அறுவடைக்கு எந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி + "||" + Gudalur area and push the rice harvest, Harvest Machinery unavailable - Farmers Awadhi

கூடலூர் பகுதியில் நெல் மகசூல் அமோகம், அறுவடைக்கு எந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி

கூடலூர் பகுதியில் நெல் மகசூல் அமோகம், அறுவடைக்கு எந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
கூடலூர் பகுதியில் நெல் மகசூல் அமோகமாக உள்ளது. ஆனால் அறுவடைக்கு எந்திரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கூடலூர்,

மலை மாவட்டமான நீலகிரியில் ஊட்டி, குன்னூர் பகுதியில் தேயிலை விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்கள் இணையும் எல்லையில் கூடலூர் பகுதி உள்ளது. இங்கு தேயிலைக்கு இணையாக காபி, குறுமிளகு, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. இது ஆண்டு முழுவதும் அன்னிய செலாவணியை ஈட்டி வருகிறது. இது தவிர சமவெளி பிரதேசங்களில் பயிரிடப்படும் நேந்திரன் வாழைகள், காய்கறிகள் விளைகிறது. இதனால் மலை மற்றும் சமவெளி பகுதியில் விளையும் பயிர்கள் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டு உள்ளது.

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மழை பெய்யும் காலமாக உள்ளது. இதனால் நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவது வழக்கம். மேலும் தொடர் மழை பெய்யும் என்பதால் பாரதி, கந்தசால், அடுக்கை, மரநெல் உள்ளிட்ட நாட்டு ரக நெல் நாற்றுக்களை விவசாயிகள் ஆண்டுதோறும் பயிரிட்டு வருகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பொன்னி அரிசி விளைவிக்கப்படும் சூழலில் கூடலூர் பகுதி விவசாயிகள் நாட்டு ரக நெல்லை இயற்கை முறையில் விளைவித்து வருகின்றனர். இதனால் தங்களுடைய சொந்த உபயோகத்துக்கு போக மீதமுள்ள நெல்லை கேரள வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடப்பு ஆண்டில் கூடலூர் பகுதியில் தொடர் கனமழை பெய்தது. இதனால் நெல் மகசூல் அமோகமாக உள்ளது. விளைச்சல் அதிகரித்து இருந்தாலும் மழையும் தொடர்ந்து பெய்து வந்தது. இதனால் நெற்கதிர்கள் வீணாகும் நிலை காணப்பட்டது. மேலும் விளைந்த நெற்கதிர்களை விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் தவித்தனர். தற்போது மழையும் நின்று பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்வதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனால் நெல் அறுவடைக்கு எந்திரங்கள் வாடகைக்கு கிடைக்காததால் விவசாயிகள் அவதி அடைந்து உள்ளனர். கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் சில ஆண்டுகளாக சமவெளியில் இருந்து எந்திரங்களை வரவழைத்து வாடகைக்கு விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.

இதற்கிடையில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயம் களை கட்டி உள்ளது. இதனால் நெல் அறுவடை எந்திரங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. ஆனால் கூடலூர் பகுதியில் அறுவடை தாமதமாவதால் வயலில் நெற்கதிர்கள் உதிர்ந்து வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

இதுகுறித்து கூடலூர் பகுதி இயற்கை விவசாய பாதுகாப்பு சங்க நிர்வாகி சிவதேவன் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் பல தலைமுறைகளை கடந்தும் நாட்டு ரக நெல் விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக கூலி தொழிலாளர்களை கொண்டு நெல் அறுவடை செய்யப்பட்டு வந்தது. பின்னர் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. நாளடைவில் சமவெளியில் இருந்து வாடகைக்கு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு நெல் அறுவடை செய்யப்பட்டு வந்தது. இதற்காக 1 மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. சமவெளியில் கட்டணம் ரூ.ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வாரக்கணக்கில் எந்திரங்கள் கூடலூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு நெல் அறுவடை செய்யப்பட்டு வந்தது.

நடப்பு ஆண்டில் நெல் அறுவடை எந்திரங்களை வாடகைக்கு கிடைப்பது இல்லை. இது சம்பந்தமாக விசாரித்த போது நல்ல மழை பெய்து மகசூல் அதிகரித்து உள்ளதால் எந்திரங்களுக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அறுவடை எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு விட்டது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதியில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் சமவெளியில் இருந்து வரவழைக்கப்படும் எந்திரங்களின் கட்டணம் அதிகமாக உள்ளது.

இதனால் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள நெல் அறுவடை எந்திரத்தை கூடலூர் விவசாயிகளுக்கு வாடகைக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தனியார் எந்திரங்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. உரிய நேரத்தில் நெற்கதிர்களை அறுவடை செய்யாவிட்டால் வீணாகி விடும்.

இதற்கிடையில் முதுமலை எல்லையோரத்தில் உள்ள வயல்களில் காட்டுயானைகள் புகுந்து, விளைந்த பயிர்களை தின்றும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் ந‌‌ஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் விரைவாக அறுவடை செய்ய வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே விவசாயிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள எந்திரத்தை கூடலூர் பகுதி விவசாயிகளுக்கு வாடகைக்கு இயக்க வேண்டும். மேலும் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். எனவே அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...