புளியங்குடி பகுதியில் வீடு, கோவில்களில் கொள்ளையடித்த வாலிபர் கைது


புளியங்குடி பகுதியில் வீடு, கோவில்களில் கொள்ளையடித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 6:27 PM GMT)

புளியங்குடி பகுதியில் வீடு, கோவில்களில் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புளியங்குடி, 

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக கோவில்கள், வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் ஆலோசனையின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், போலீஸ்காரர்கள் சிவராமகிருஷ்ணன், மதியழகன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை கொள்ளை சம்பவங்கள் நடந்த கோவில்கள், வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது புளியங்குடியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சூரியகாந்தி (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், சூரியகாந்தியை கைது செய்து, விசாரணை நடத்தினார்கள்.

அதில் புளியங்குடி கற்குவேல் அய்யனார் கோவில், விநாயகர் கோவில், புளியமரத்து அம்மன் கோவில், கங்கா பரமேசுவரி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், பெட்டிக்கடையிலும் பணம் திருடியதும், புளியங்குடியைச் சேர்ந்த காளைப்பாண்டியன் என்பவருடைய வீட்டில் இருந்து 2 பவுன் தங்க நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.22 ஆயிரம், நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சூரியகாந்தியை போலீசார் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Next Story