பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள் அகற்றப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு


பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள் அகற்றப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 7:05 PM GMT)

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படுமா? என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கும்பகோணம்,

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்புகள் பற்றி சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடியுள்ளனர்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய 3 பகுதிகளில் வாசல்கள் உள்ளன.

கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்தின் வழியே வந்தால் நந்தியை கடந்து சாமி சன்னதிக்கு நேரடியாக செல்லலாம். தெற்கு பகுதி வழியாக வந்தால் குளத்திற்கும், வடக்கு வாசல் பகுதி வழியாக வந்தால் துர்க்கை அம்மன் சன்னதிக்கும் செல்லலாம்.

ராஜகோபுரத்தில் செடி

இங்குள்ள கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை கவரும் வகையிலும் கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் மழை மற்றும் வெயிலை தாங்கக்கூடிய அளவிற்கு வர்ணங்கள் பூசப்பட்டு மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது.

இந்தநிலையில் ராஜகோபுரம் உள்பட 3 கோபுரங்களிலும் செடிகள் முளைத்துள்ளன. இந்த செடிகளால் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் சேதமடைவதற்கான வாய்ப்பு உள்ளன. எனவே சிற்பங்கள் சேதம் அடைவதற்கு முன்பாக கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story