பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 4-வது நாளில் 144 பேர் வேட்பு மனு தாக்கல்


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 4-வது நாளில் 144 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 7:23 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 4-வது நாளில் 144 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கடந்த 9-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 259 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு பெரம்பலூர் ஒன்றியத்தில் ஒருவரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பெரம்பலூர் ஒன்றியத்தில் 3 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 4 பேரும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 9 பேரும், வேப்பூர் ஒன்றியத்தில் 3 பேரும் என மொத்தம் 19 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பெரம்பலூர் ஒன்றியத்தில் 22 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 20 பேரும், ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஒன்றியங்களில் தலா 41 பேரும் என மொத்தம் 124 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 4-வது நாளான நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 144 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில், இதுவரைக்கும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 68 பேரும், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 333 பேரும் என மொத்தம் 403 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கு யாரும்...

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரைக்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு யாருமே வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுக்கள் பெறும் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பதவிக்கு வேட்பு மனு பெறும் அதிகாரிகள் யாரேனும் வேட்பு மனு தாக்கல் செய்ய வருவார்களா? என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது அவர்களுடன் வந்திருந்த ஆதரவாளர்களால் கூட்டமாக வந்ததால், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏதோ திருவிழா நடப்பது போல் இருந்தது. ஆனால் நேற்று 4 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story