சுற்றுச் சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வந்த பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் - கலெக்டர் வழங்கினார்


சுற்றுச் சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வந்த பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 7:35 PM GMT)

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை கொண்டு வந்த பக்தர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்களை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

திருவண்ணாமலை, 

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த தடையாணையை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது பிளாஸ்டிக் தூக்கு பைகளை தவிர்த்து துணிப்பை, சணல்பை அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்கு பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்க முடிவு செய்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். மகா தீபத்தின் போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துணிப்பை, சணல்பை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை எடுத்து வருவோருக்கு வெள்ளி நாணயம், தங்க நாணயம் வழங்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த 9-ந் தேதி மாலை 6 மணி முதல் 10-ந் தேதி மாலை 6 மணி வரை குலுக்கல் முறையில் வெள்ளி நாணயத்திற்கு 72 பேரும், தங்க நாணயத்திற்கு 12 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தங்க நாணயங்களை வழங்கினார்.

இதுகுறித்து மாசுகட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் விஸ்வநாதன் கூறுகையில், மகாதீபத்தின் போது திருவண்ணாமலைக்கு துணிப்பை மற்றும் சணல்பை கொண்டு வந்த 30 ஆயிரம் பேருக்கு வெள்ளி நாணயம், தங்க நாணயம் குறித்து டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு வெள்ளி நாணயமும், 12 பேருக்கு தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. பரிசு வழங்க குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அடுத்த கிரிவலத்தின் போது வந்து பெற்று கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆறுதல் பரிசாக டோக்கன் பெற்ற அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது என்றார். அப்போது உதவி பொறியாளர் சுகாஷினி உடனிருந்தார்.

Next Story